மழையோ, புயலோ எந்தவொரு இயற்கைப் பேரிடராக இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர், நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோரைத் தேடிச்சென்று உணவளிப்பதைக் கடமையாகச் செய்து வருகிறார் நெல்லை பாலு.
மதுரையின் `அட்சயப் பாத்திரம்’ என்ற அமைப்பின் மூலம் ஆதரவற்றோருக்கு தினமும் மதிய உணவு வழங்குவதைக் கடந்த இரண்டு வருடமாகச் செய்துவரும் இவர், பார்வை சவால் உள்ள மாற்றுத்திறனாளிக் குடும்பங்களுக்கு மாதம்தோறும் அரிசி வழங்கி வருவதையும் பல வருடங்களாகச் செய்து வருகிறார்.
அதிலும் கொரோனா காலகட்டத்தில் உறவினர்களே சந்திக்க அஞ்சிய நிலையில், கோயிலில் பணியாற்றி வருமானமின்றி இருந்த ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருள்களும், மருந்தும் வழங்கினார்.
தினமும் ஒரு கலவை சாதத்தை சமைத்து, சுகாதாரமான முறையில் டப்பாக்களில் அடைத்து மதுரையில் சாலையோரங்களில், மருத்துவமனை வாசல்களில் உணவுக்காகக் காத்திருப்பவர்களுக்கும் வழங்கி வரும் நெல்லை பாலுவின் சேவையைப் பார்த்து மாவட்ட ஆட்சியரும், பல்வேறு அமைப்புகளும் விருது வழங்கிப் பாராட்டுத் தெரிவித்துள்ளன.
நண்பர்கள் தெரிந்தவர்களிடம் உதவிகளைப் பெற்று தினமும் உணவைத் தயார்செய்து, அதைச் சரியாக விநியோகித்து வீடு திரும்புகின்ற சுழற்சியான வாழ்க்கை என்பது ஒரு கட்டத்தில் அயர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால், இவர் விடாமல் செய்து வருகிறார் .
குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு ஆன்மிகப் பணி, ரோட்டரி பணி மட்டுமின்றி எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்துபவர் எனப் பல்வேறு அடையாளத்தோடு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருவதை தினசரி வேலையாகச் செய்துவரும் நெல்லை பாலுவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம். அப்போதுதான் அன்றைக்கு விநியோகம் செய்யவேண்டிய தயிர் சாதத்தை சமையல்காரருடன் சேர்ந்து சமைத்து இறக்கி வைத்துவிட்டு வந்து நம்மிடம் பேசினார்.
“நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம்தான் சொந்த ஊர். பண்ணை வெங்கட் ராமய்யர் பள்ளி, நெல்லை ம.தி.தா பள்ளி, பத்தமடை பள்ளியிலும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பி.ஏ ஆங்கிலமும், ம.தி.தா இந்துக் கல்லூரியில் எம்.ஏ தமிழ் இலக்கியமும் படித்தேன். படிக்கும் காலத்தில் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றேன்.
1982-ல் கல்லூரியில் படிக்கும்போது அகில இந்திய அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு அப்போதைய குடியரசுத்தலைவரிடம் விருதும், பரிசும் பெற்றேன். அதற்காக தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், என்னைப் பாராட்டி பெரும் தொகையைப் பரிசாகத் தந்தார்.
அதன்பின் என் குடும்பத்தினரும், என் ஆசிரியர்களும் ஊக்கப்படுத்தியதால் தொடர்ந்து பட்டிமன்றங்களில் பேச ஆரம்பித்தேன். இதற்கிடையே நாளிதழ் செய்தியாளராகக் காஞ்சிபுரத்தில் 15 ஆண்டுகள் பனியாற்றினேன். அது என் வாழ்க்கையில் இன்னொரு வாசலைத் திறந்தது. காஞ்சி மகா பெரியவரின் அருளாசி கிடைத்தது. 25-க்கும் மேற்பட்ட ஆன்மிக நூல்கள் எழுதினேன். பரமாசார்யர் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய நூலை அப்போதைய குடியரசுத்தலைவர் வெங்கட்ராமன் வெளியிட்டார். எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற சிந்தனையைக் காஞ்சிபுரம் ஏற்படுத்தியது. எம்.எஸ்.உதயமூர்த்தியுடனும் சில காலம் பயணித்தேன்.
2000 -ம் ஆண்டில் மதுரை வந்தபின்பு சமூக சேவையில் அதிகம் ஈடுபட ஆரம்பித்தேன். மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாகப் பார்வையற்றவர்கள் வாழ்கிறார்கள். தகவல் தொடர்பு வளர்ச்சியால் அவர்கள் நடத்தி வந்த டெலிபோன் பூத், நாற்காலி பின்னுகிற வேலை வாய்ப்புகள் இல்லாததால் ரொம்பவும் கஷ்டப்படுவதைப் பார்க்க முடிந்தது. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவுசெய்து பாரதி யுவகேந்திரா என்ற அமைப்பைத் தொடங்கி நண்பர்கள் உதவியுடன் கண் பார்வையற்ற 25 குடும்பங்களுக்கு மாதம்தோறும் அரிசியும் ஆண்டுக்கொரு முறை புத்தாடையும் வழங்க ஆரம்பித்தோம். அது வளர்ந்து தற்போது மாதம்தோறும் 250 குடும்பங்களுக்குத் தலா பத்து கிலோ அரிசி வழங்கி வருகிறோம்.
இந்த நல்ல காரியம் மக்களிடம் போய்ச்சேர வேண்டும் என்பதற்காக எனக்குத் தெரிந்த சினிமா, இசை, அரசியல் உள்ளிட்ட துறைகளில் பிரபலமாக இருப்பவர்களை அழைத்து வந்து அரிசி வழங்க ஆரம்பித்தோம். பள்ளிக் குழந்தைகளை உற்சாகப்படுத்த போட்டிகள் நடத்திப் பரிசு வழங்க ஆரம்பித்தோம். தங்கள் திறமை குறிப்பிட்டு எங்களுக்கு தபால் அனுப்பினால் போதும், ‘யுவஸ்ரீ கலா பாரதி’ என்ற சான்றிதழை அனுப்பி இதுவரை ஒரு லட்சம் மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறோம்.
இது ஒருபக்கமென்றால் நான் தலைவராக இருக்கும் கிழக்கு ரோட்டரி சங்கம் மூலம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், போட்டிகளில் கலந்து கொள்ள வெளிநாடு செல்லப் பல லட்ச ரூபாய் அளவுக்கு உதவிகள் செய்திருக்கிறோம்.
இந்த உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா, பல மனிதர்களின் வாழக்கையையும் புரட்டி போட்டது. அந்த நேரத்தில் மதுரையில் பலரும் தங்களால் முடிந்த உதவியைப் பலருக்கும் செய்தார்கள். அப்போது அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் `அட்சயப் பாத்திரம்’ என்ற பெயரில் மருத்துவமனை நோயாளிகள், ஆதரவற்றவர்களுக்கு சிறப்பான முறையில் 150 நாள்களுக்கு சத்தான உணவு வழங்கினார். அது எனக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
கொரோனா தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தாலும் அதேபோல் தரமான உணவை தினமும் நான் வழங்க நினைத்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் இது. ஒரு நாளைக்கு 200 முதல் 300 பேருக்கு மதிய உணவு வழங்கி வருகிறேன். தெரிந்தவர்கள் உதவுகிறார்கள். நாளை உணவு தயார் செய்யப் பணம் இல்லையே என்ன செய்வது என்று யோசிக்கும்போதே, நண்பரோ, தெரிந்தவரோ தன் பங்களிப்பை அனுப்பி வைப்பார். இதற்காகப் பிறரிடம் உதவி கேட்பதில் தயக்கம் இருந்தாலும் என் நிலை உணர்ந்து பலர் உதவுகிறார்கள். மதுரையில் ஆதரவற்றவர்களுக்கு 3 வேளையும் உணவளிக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசை. அதற்கும் காலம் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.
இது மட்டுமின்றி மாதம் தோறும் அனுச நட்சத்திரத்தில் காஞ்சி பெரியவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆன்மிகப் பேச்சாளர்களை அழைத்து வந்து பக்தி விருந்தும் அளித்து வருகிறார்.