அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்ததிலிருந்து எடப்பாடி பழனிசாமி தனது வேகத்தை கூட்டியுள்ளார். மாற்றுக் கட்சியிலிருந்து ஆள்களை இணைத்து வரும் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கத்தை அழைத்து வர ஸ்கெட்ச் போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
எடப்பாடியின் சாதுர்யம்!அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து வழிநடத்தி வந்த போது கட்சியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என அனைத்து தரப்பையும் தன் பக்கம் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய் நகர்த்தி வந்தார். அவர்களுக்கு வேண்டியதை தக்க சமயத்தில் செய்து கொடுத்ததும், சில விஷயங்களில் சுதந்திரமாக இயங்க அனுமதித்ததும் எடப்பாடி பழனிசாமி பக்கம் அதிமுக நிர்வாகிகள் மிகப் பெரும்பான்மையானவர்கள் வர காரணமாக அமைந்தது.
ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்தனக்கு பின்னால் வலுவான கூட்டம் இருக்கிறது என்பதை உறுதிபடுத்திக் கொண்ட பின்னரே முதல்வர் வேட்பாளர் விவகாரம், எதிர்கட்சித் துணைத்தலைவர் விவகாரம், ஒற்றைத் தலைமை விவகாரம் என ஒவ்வொன்றாக செயல்படுத்தி ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டி கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி சாதித்து காட்டியுள்ளார்.
இரட்டை இலை இருக்க மற்றதெல்லாம் எதற்கு?இருந்த போதும் டெல்லியோ தொடர்ந்து ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று கூறி வருகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியோடு மோத வேண்டும் என்றால் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவு அதிமுகவுக்கு வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் இரட்டை இலை சின்னத்தின் மூலம் அவர்கள் இல்லாமலே வெற்றி பெற முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.
எடப்பாடி டெல்லிக்கு சொன்ன மெசேஜ்!தனது செல்வாக்கை அதிமுகவினரிடம் மட்டுமல்லாமல் டெல்லி வரை காட்டும் விதமாகவே எடப்பாடி பழனிசாமி மாற்றுக் கட்சியினரை வளைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். உட்கட்சிப் பிரச்சினை அதிமுகவில் இல்லை, பாஜகவில் தான் உள்ளது அதை முதலில் சரி செய்யுங்கள் என்று சொல்லாமல் சொல்லும் வகையில் பாஜக நிர்வாகிகளை கொத்தி தூக்கியுள்ளார்.
அமமுக நிர்வாகிகள் இணைப்புஅதுமட்டுமல்லாமல் அமமுகவின் மூத்த நிர்வாகிகளான திருப்பத்தூர் உமா தேவன், இளைஞரணிச் செயலாளர் கோமல் அன்பரசன் ஆகியோரை அதிமுகவுக்கு கொண்டு வந்துள்ளார். சிவகங்கை பொதுக்கூட்டம் முடிந்த கையோடு நேற்று இவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
வைத்திலிங்கத்துக்கு ஸ்கெட்ச்ஓபிஎஸ் பக்கம் இருந்தும் ஆள்களை உருவ டீம் அமைத்து வேலை நடந்து வருவதாக சொல்கிறார்கள். பன்னீர் செல்வம் இவ்வளவு தூரம் நின்று சமர் செய்ய மாட்டார், வைத்திலிங்கம் உடன் இருப்பதாலேயே துணிச்சலாக சில முடிவுகளை எடுத்து இன்னும் எதிர்த்து வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வைத்திலிங்கத்தை எப்படியாவது அழைத்து வாருங்கள் என உத்தரவு போயுள்ளதாம்.
ஜெயிக்கிற பக்கம் வாருங்கள்!எடப்பாடி பழனிசாமியுடன் வைத்திலிங்கத்துக்கு எந்தவிதமான மோதலும் இல்லையாம். ஆனால் அவரது அணியில் இருக்கும் இரு மூத்த நிர்வாகிகளுடனான மோதல் தான் இன்னும் அவரை ஓபிஎஸ் அணியில் இருக்க வைத்துள்ளதாக சொல்கிறார்கள். “அரசியலில் ரெண்டு பேர் ஆதரிப்பார்கள், நாலு பேர் எதிர்ப்பார்கள். அதற்காக கோபித்துக் கொண்டு தோற்கிற இடத்தில் நிற்பது என்ன நிலைப்பாடு? எதிர்காலத்தை பார்க்க வேண்டும் இல்லையா, எனவே விரைவில் நல்ல முடிவு எடுங்கள்” என்று அவருக்கு தூது மூலம் கூறப்பட்டுள்ளதாம்.
திருச்சியில் திருப்பம் யாருக்கு? திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி தனது அணியின் செல்வாக்கை காட்ட வேண்டும் என்று ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகளையும் வைத்திலிங்கம் தான் ஒருங்கிணைத்து வருகிறார். இந்த சூழலில் எடப்பாடி தரப்பிலிருந்து அவருக்கு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு வருகின்றன. திருச்சியில் கூட்டம் நடத்தினால் திருப்பம் இருக்கும் என்பார்கள். ஓபிஎஸ்ஸுக்கு இது எந்த மாதிரியான திருப்பமாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.