திருப்புவனம்: திருப்புவனத்தை சுற்றியுள்ள பழையூர், கலியாந்தூர், நயினார்பேட்டை, வெள்ளக்கரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர். மதுரை மார்கெட்டில் சோழவந்தான் வெற்றிலைக்கு அடுத்த படியாக திருப்புவனம் வெற்றிலைக்கு கிராக்கி உண்டு. ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுகாமணி, கற்பூரம், நாட்டு வெற்றிலை என ஏராளமான ரகங்கள் விவசாயிகள் பயிரிட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தனர்.
இந்நிலையில் வெற்றிலையில் நோய் தாக்குதல், இயற்கை பேரிடரால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெற்றிலை சாகுபடி வெகுவாக சுருங்கி தற்போது 50 ஏக்கரில் ஒருசில விவசாயிகள் மட்டும் சாகுபடி செய்து வருகின்றனர். அதிலும் திருப்புவனம் கற்பூர வெற்றிலை காரைக்குடி பகுதி மக்கள் வெகுவாக விரும்புவார்கள். தற்போது கற்பூர வெற்றிலை ஒரே ஒருவர் மட்டுமே ஒரு ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறார். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வெற்றிலை என்பது சிறுபிள்ளையை பராமரிப்பது போன்று வெயில் அதிகமாக இருந்தால் கருகிவிடும்.
மழை அதிகமாக பெய்தால் அழுகிவிடும். முதலீடும் ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வரை செலவு செய்கிறோம். இதற்கு காப்பீடு செய்வதில் ஏகப்பட்ட சிரமங்கள் உள்ளன. இழப்பீடு தருவது தோட்டகலைத்துறையா, வேளாண் துறையா என்ற குழப்பமும் உள்ளது. எந்த துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. வருடத்தில் 6 மாதங்கள் விளைச்சல் அதிகமாக இருக்கும். விலையும் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் கஷ்டமான சூழல்தான்.
அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்கவோ, பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிடவோ முன்வருவதில்லை. மீறி வந்தாலும் விவசாயிகளை அலட்சியப்படுத்துவதால் விவசாயிகள் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். எனவே விளைச்சல் அதிகமுள்ள காலங்களில் வெற்றிலையை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வெற்றிலை சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் என்றனர்.