ஜான்சி: திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது மணமகனுக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பால், மணமகள் அவருடன் செல்ல மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி அடுத்த லிகோல் கிர்கியில் வசிக்கும் தீபக் சாக்யா என்பவரின் சகோதரி ஆர்த்திக்கும், ஜான்சி அடுத்த பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இருவருக்கும் திருமணமும் நடைபெற்றது. அதன்பின் மணமகளை அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் வைபவம் நடந்தது. அப்போது மணமகன் ராஜ்குமார் திடீரென வலிப்பு வந்து கீழே விழுந்ததால், மணமகள் ஆர்த்தி அவருடன் செல்ல மறுத்துவிட்டார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தீபக் சாக்யா கூறுகையில், ‘எனது சகோதரியை அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் திருமண ஊர்வலம் நடந்தது. வழியனுப்பி வைக்கும் போது எனது சகோதரி காரில் அமர்ந்தார். ஆனால் மணமகன் காரை நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தார். அவர் தனது ஆடைகளை கிழிக்க ஆரம்பித்தார். அவருக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தால், அவருடன் செல்ல எனது சகோதரி மறுத்துவிட்டார். ஆனால் மணமகன் வீட்டார் எனது சகோதரியை அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்வதில் பிடிவாதமாக இருந்தனர்.
ஆனால் எனது சகோதரி காரில் இருந்து கீழே இறங்கி, எங்களது உறவினர்களிடம் வந்துவிட்டார். இவ்விவகாரம் குறித்து நகர போலீசில் புகார் அளித்தோம். இப்போதைக்கு எனது சகோதரியை மணமகன் ராஜ்குமாருடன் அனுப்பி வைக்க முடியாது’ என்றார். இதுகுறித்து மணமகன் தரப்பில், கடந்த 3 நாட்களாக மணமகன் சரியாக தூங்கவில்லை என்றும், அதனால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றும், அவருக்கு வலிப்பு நோய் இல்லை என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து இருதரப்பினரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.