பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகேயிருக்கும் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பூக்கடை வைத்திருக்கிறார். இவருக்கு ஜூலி என்ற மனைவியும், ரோஹித் ராஜ் (15) உட்பட மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். மூத்த மகனான ரோஹித் ராஜ் 9-ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தியதோடு, வீட்டில் தங்காமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்திருக்கிறார்.
இந்த நிலையில், நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் இந்திரா நகர் பகுதியில் ரோஹித் ராஜ் நின்று கொண்டிருக்கிறார் அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் மது பாட்டிலை உடைத்து, ரோஹித் ராஜை குத்திக் கொடூரமாகத் தாக்கியிருக்கின்றனர். இதில் உடலில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சிறுவன் ரோஹித் ராஜ், தன்னைக் காப்பாற்றும் படி அலறிக்கொண்டே வீதியில் ஓடி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சாலையில் சரிந்து விழுந்த ரோஹித், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அதையடுத்து பெரம்பலூர் டி.எஸ்.பி பழனிச்சாமி, பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீஸார் உடனே சம்பவ இடத்துக்கு வந்தனர். சிறுவன் ரோஹித் ராஜின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விஷயமறிந்து பெரம்பலூர் எஸ்.பி ஷ்யாம்ளாதேவியும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ‘இந்திரா நகர் பகுதியிலுள்ள சமுதாயக் கழிப்பிடம் அருகே மாலையில் இளைஞர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து மது அருந்தியிருக்கின்றனர். அப்போது அங்கு ரோஹித் ராஜூம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அப்போது போதையில் இருந்த இளைஞர்கள் சிலருக்கும், சிறுவன் ரோஹித் ராஜூக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கிறது. அதில் கோபமடைந்த இளைஞர்கள், மது பாட்டிலை உடைத்து சிறுவன் ரோஹித் ராஜை துடிக்கத் துடிக்க குத்திக் கொலைசெய்திருக்கின்றனர். சுமார் 8 இளைஞர்கள் சேர்ந்து இந்த கொலைச் சம்பவத்தை செய்துள்ளதாக முதற்கட்டமாகத் தெரியவந்திருக்கிறது’. அதையடுத்து இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து, பெரம்பலூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.