"நலத்திட்டங்களைக் கொண்டு சேர்ப்பது எங்கள் பணி; கூட்டணி குறித்து முதல்வர் முடிவுசெய்வார்" ஐ.பெரியசாமி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திட்ட இயக்குநர் தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “2021-2022 – 2022-2023 நிதியாண்டுகளில் அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி ஊராட்சி வளர்ச்சி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், முதல்வரின் கிராமப்புறச்சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர்‌ மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 22,162 பயனாளர்கள் உள்ள நிலையில், அதில் 14,628 பேருக்கு அதாவது, 77 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருக்கிறது.

ஆய்வுக்கூட்டம்

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், அனைத்து கிராம மக்களையும் முழுமையாகச் சென்றடைய வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் இரு கிரமங்களுக்குச் சேர்த்து ஒரு குழு தொடங்கப்பட்டு, பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நூறுநாள் வேலைத்திட்டப் பயனாளர்களுக்கு அதிக நாள்கள் பணி வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பிரதான சாலைகளிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அனைத்து சாலைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதிகள் செய்துகொடுக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். முடிவுறாத திட்டப் பணிகளான 2 கதிர் அடிக்கும் களங்கள், 4 அங்கன்வாடி மையங்கள், 2 சமையல் கூடங்கள், பள்ளிக் கழிவறை, அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் 150 வீடுகள், 3 பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்டப் பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்கவேண்டும்” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “மதுரையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்றுவருகிறது. கிராமப்புறச்சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். நிதிநெருக்கடி நிலவும் சூழ்நிலையிலும் பள்ளிக் கட்டடங்களை சீரமைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். எனவே, சீரமைப்பு செய்யப்படவேண்டிய அனைத்து பள்ளிக் கட்டடங்களும் விரைவில் சீரமைக்கப்படும்” என்றார்.

சந்திப்பு

இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான கூட்டணிக் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “மக்களிடம் நலத்திட்டப் பணிகளை கொண்டுச்செல்வது எங்கள் வேலை. கூட்டணி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” எனப் பதிலளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.