நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது: பிரதமர் மோடி பாராட்டி சொன்ன 4 விஷயங்கள்!

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் தென்னிந்தியாவில் இருந்து சென்றிருந்த ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்தியர்கள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு லாரன் கோட்லீப் குழுவினர் நடனமாடி அசத்தினர்.

ஆஸ்கர் விருது கவுரவம்

இந்நிலையில் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் மகிழ்ச்சிகரமான செய்தி வந்து சேர்ந்தது. உலக சினிமா கலைஞர்கள் குவிந்திருந்த அரங்கில், சர்வதேச சினிமா ரசிகர்கள் நேரில் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. சிறந்த ஒரிஜினல் பாடல் (Best Original Song) பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது.

இசையமைப்பாளர் கீரவானி மகிழ்ச்சி

இந்த விருதை இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் மேடைக்கு சென்று பெற்றுக் கொண்டனர். இதன்மூலம் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கு ஆஸ்கர் விருது வெல்லும் முதல் இந்திய பாடல் என்ற பெருமையை நாட்டு நாட்டு பெற்றது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது ஆச்சரியப்படுத்தியது.

ராஜமௌலி இயக்கம்

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ராஜமௌலி இயக்கத்தில் உருவானது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்திருந்தனர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம், நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான விஷயங்கள் என சுதந்திர போராட்ட காலகட்டத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.

பிரதமர் மோடி வாழ்த்து

இதனை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் வாழ்த்துகளை நாட்டு நாட்டு குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி The Academy ட்விட்டர் பக்கத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட ட்வீட்டை ரீ-ட்வீட் செய்திருக்கிறார். மேலும், ”
அற்புதம்! நாட்டு நாட்டு பாடலின் புகழ் உலகம் முழுவதும் பரவிவிட்டது.

பெருமைப்படும் இந்தியா

இந்த பாடல் பல ஆண்டுகளுக்கு மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும். இசையமைப்பாளர் கீரவானி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறது”
எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

பாடல் வடிவில் நன்றி

முன்னதாக ஆஸ்கர் மேடையில் விருதை பெற்றுக் கொண்டு பேசிய இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி, இந்த விருதை இந்திய திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் சமர்பிக்கிறேன். இயக்குநர் ராஜமௌலிக்கு நன்றி. ஆஸ்கர் விருது பெறுவதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என பாடல் வடிவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.