ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில், கால்பந்து போட்டியில் கலந்துக்கொண்டச் சிறுமி விளையாடுவதற்காக சென்றிருக்கிறார். அப்போது கழிவறைகளில் கூட்டமாக இருந்ததால், அருகில் இருந்த மலைக்கு தன் அவசரத் தேவைக்காகச் சென்றிருக்கிறார்.
அந்த சமயத்தில் அங்கு பைக்கில் வந்த மூன்று சிறுவர்கள், அந்த சிறுமியைத் தாக்கி, வலுக்கட்டாயமாக பைக்கில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு மூவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அதை வீடியோவாகவும் பதிவு செய்து, இந்த சம்பவத்தை வெளியே கூறினால், வீடியோவை வெளியிட்டுவிடுவோம் எனவும் மிரட்டி அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், அச்சத்திலிருந்த சிறுமி, தற்போது தனக்கு நடந்த கொடூமையை தன் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, முதற்கட்ட விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறையினர்,”குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படுத்து வருகிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் சிறுவர்கள் தான். அவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைக் கைதுசெய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது IPC பிரிவுகள் 363 (கடத்தல்), 376 DA (பதினாறு வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தல்), மற்றும் POCSO சட்டத்தின் பிரிவுகள் 6 மற்றும் 13 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.” எனத் தெரிவித்திருக்கின்றனர்.