புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் 253 காவலர், 26 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் காவலர் பணியிடங்களுக்கு 14 ஆயிரத்து 173 பேரும், ஓட்டுநர் பணியிடத்துக்கு 881 பேரும் விண்ணப்பித்தனர். அவற்றில் தகுதியான 14 ஆயிரத்து 45 பேர், ஓட்டுநர் பணிக்கு 877 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இவர்களுக்கான உடல்தகுதி தேர்வு கோரிமேடு காவலர் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் நாளில் 500 பேர் இத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இத்தேர்வினை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். பின்னர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டன. அதன்பிறகு உடல்திறன் தேர்வு நடைபெற்றது. மார்பளவு, உயரம், எடை பரிசோதனை செய்தனர். பின் 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வானது வருகிற 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதை ஏடிஜிபி ஆனந்த மோகன், ஐஜி சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். காவல் மைதானத்தில் நடைபெறும் அனைத்து தேர்வு முறைகளும் சிசிடிவி மூலம் காண்காணிக்கப்பட்டு வருகிறது. பெண் காவலருக்கான போலீஸ்சாருக்கான தேர்வு வருகிற 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடக்கிறது. 31-ம் தேதி ஓட்டுநர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடக்கிறது.
தேர்வை பார்வையிட்ட பின் அமைச்சர் நமச்சிவாயம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”புதுச்சேரி அரசானது காலி பணியிடங்களை நிரப்ப கொள்கை முடிவெடுத்து, கடந்தாண்டு காவல் துறையில் 390 காவலர்களை நேர்மையான முறையில் தேர்வு செய்தது. பயிற்சி பெற்று வரும் அவர்கள் வெகு விரைவில் பணியாற்ற தயாராக இருக்கின்றனர். தற்போது 356 காவலர் பயிணிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் ஊர்காவல் படையைச் சேர்ந்த 85 பேர் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட இருக்கின்றனர். அதுமட்டுமின்றி 18 பேர் வாரிசுதாரர் அடிப்படையில் இப்பணியில் சேர்க்கப்பட உள்ளனர். இவர்களை தவிர 253 பேருக்கான உடல் தகுதி தேர்வு இன்று ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.
நேர்மையான முறையில் தகுதி உள்ளவர்களுக்கு கிடைப்பதற்காக அரசு வழிவகை செய்துள்ளது. எனவே எந்த ஒரு குறுக்கு வழியையும் யாரும் பின்பற்ற வேண்டாம். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். அடுத்த கட்டமாக 200 கடலோர காவல் படை, ஊர்காவல் படை வீரர்களும், காவல் துறையில் 60 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவர்களை காவல்துறையில் பணியமர்த்துவதன் மூலம் எதிர்காலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்க சிறப்பானதாக இருக்கும். எனவே உடல்திறன் தேர்வில், எழுத்துத்தேர்வில் பங்கேற்பவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்” என்று அவர் தெரிவித்தார்.