புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பலர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் பிரான்சில் வசிக்கின்றனர். புதுச்சேரியிலும் பல கோடி மதிப்புள்ள வீடு, நிலம், மனை உள்ளிட்ட சொத்துகளை வாங்கி, விட்டு சென்றுள்ளனர்.
ஆண்டிற்கு ஒருமுறை அல்லது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் புதுச்சேரியில் மன நிம்மதிக்காக வந்து தங்கி, அப்படியே தங்களுடைய சொத்துகளையும் பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
அப்படி வந்து பார்க்கும்போது, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுகிறது. அவர்களின் சொத்துகளை போலி பத்திரம் தயாரித்து மோசடி கும்பல் அபகரித்து சொந்தம் கொண்டாடுகிறது.
பிரான்ஸ் பார்லிமென்ட்
இதுதொடர்பாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் பலரும் பிரெஞ்சு துாதரகத்தில் புகார் தெரிவித்து வந்தனர். இதன் எதிரொலியாக பிரெஞ்சு துணை துாதர் லிசே பரே தல்போ முதல்வரை ரங்கசாமியை சந்திந்து, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துகள் அபகரிப்பினை தடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்து அபகரிப்பு பிரச்னை பிரான்ஸ் பார்லிமெண்ட்டில் எதிரொலித்துள்ளது. அங்கு போராட்டமும் நடந்தது.
சிறப்பு பிரிவு
இந்நிலையில், அதிகரித்து வரும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்து அபகரிப்பு புகார்களை தனியாக விசாரிக்க, கவர்னர், முதல்வர் உத்தரவின்பேரில் தனி சிறப்பு பிரிவுஉருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பிரிவிற்கு வருவாய் துறையின் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் சேர்மனாகவும், போலீஸ் எஸ்.பி., சம்பந்தப்பட்ட எல்லையின் தாசில்தார், துணை பத்திர பதிவாளர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டரும், வருவாய் துறை செயலருமான மணிகண்டன் பிறப்பித்துள்ளார்.
செயல்பாடு எப்படி
புதுச்சேரியில் நிலமோசடிகளை விசாரிக்க ஏற்கனவே மாவட்ட கலெக்டர் தலைமையில் நில மோசடி தடுப்பு செல் உள்ளது. நில மோசடி புகார்கள் அதிக அளவில் குவிந்ததால் தாலுகா அளவில் தாசில்தார் தலைமையில் நிர்வாக ஆலோசனை குழு நில மோசடிகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நிலமோசடி சிறப்பு பிரிவு, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களிடம் மட்டும் நில அபகரிப்பு புகாரை பெற்று தனியாக விசாரணை நடத்தும்.
குற்ற நடைமுறை சட்டம் உள்பட பல்வேறு சட்டங்களின்படி நிலமோசடி புகார்கள் மீது உத்தரவுகள் பிறப்பிக்கும். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்து அபகரிப்பு நடந்திருந்தால் நில மோசடி கும்பல் மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு பரிந்துரை செய்யும்.
நம்பிக்கை
அத்துடன் நில அபகரிப்பு புகாரில் மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட பதிவாளருக்கு பரிந்துரை செய்யும். மேலும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துகளின் பாதுகாப்பதற்கான நடவடிக்கையும் எடுக்க உள்ளது.
கடந்த காலங்களில், நில மோசடியால் பாதித்த பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், பத்திர பதிவு அலுவலகத்தில் புகார் அளித்தாலும், பெரிதாக எதுவும் நடந்து விடாது. விசாரணை நடத்தும் பத்திர பதிவுத் துறை அதிகாரிகள், அனைத்து ஆவணங்களை சரிபாார்த்து, போ லியானவை என, தெரிந்தும், பாதித்தவர்கள் பக்கம் இருப்பதில்லை.
‘போலி பத்திர பதிவை நீக்க, தங்களுக்கு அதிகாரம் இல்லை. சிவில் கோர்ட்டிற்கு சென்று உத்தரவை பெற்று வாருங்கள் என்று கைகழுவி விடுவர். காவல் துறை அதிகாரிகளும் நில மோசடியில் ஈடுபடுவர்கள் மீது எப்.ஐ.ஆர் போடுவதில்லை. இது போன்ற சூழ்நிலையில் தங்களது புகார்களை விசாரிக்க தனி சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் மத்தியில் நிம்மதி ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்