புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் துவங்கியது. இன்று காலை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2023-24ம் ஆண்டுக்கான ரூ.11,600 கோடிக்கு வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:
அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களும் பயன்படும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.126 கோடி செலவாகும். ெபண் குழந்தைகள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இம்மாநிலத்தை சேர்ந்த பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தை பிறந்தவுடன் ரூ.50 ஆயிரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டு காலத்திற்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும். வணிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று வணிகர் நல வாரியத்துக்கு இந்த நிதியாண்டு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் உள்ளூர் பேருந்துகளில் அட்டவணை இன பெண்கள் இலவச பயணம் செய்ய வழிவகை செய்யப்படும். 50 புதிய மின்சார மற்றும் 50 டீசல் பேருந்துகள் விரைவில் வாங்கப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்க உயர் ரக கலப்பின கறவை பசு 50 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும். ஏற்கனவே, ஒரு கறவை பசு வைத்திருப்பவர்களுக்கு 50 விழுக்காடு மானியத்தில் 2 கலப்பின கறவை பசு வழங்கப்படும். புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு நடத்தப்படும். கல்வி தரத்தை உயர்த்தும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் பொருட்டு மாலை நேரத்தில் பள்ளிகளில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும். கல்வி தரத்தை மேலும் உயர்த்தும் பொருட்டு அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும். நடப்பாண்டு முதல் மின் ஆய்வுகளை மேலும் திறப்பட மேற்கொள்ள மின் ஆய்வு மற்றும் மின்சார உரிமம் வழங்கும் வாரியம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து கோயில்களிலும் கடவுள் திருவுருவ சிலைகள், தங்கம் வெள்ளி ஆபரணங்கள், அசையும் சொத்துக்களின் ஆவணங்கள் மின்னணு முறையில் தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். கலப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தொழில்கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு அளித்து வரும் மாதாந்திர உதவித்தொகை மற்றும் மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000மாக உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. இந்த முறையும் முதல்வர் ரங்கசாமி புதிய வரிவிதிப்புகள் ஏதும் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.