ஆரல்வாய்மொழி: திருநெல்வேலி மாவட்டம் கள்ளிகுளம் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை. ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள ஒரு ஆக்கர் கடையில் வேலை பார்த்து வந்தார். அவரது மகனின் மகளான பேத்திக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. குழந்தை பார்க்க அய்யாத்துரை இன்று காலை கள்ளிகுளத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஆசாரிப்பள்ளம் நோக்கி புறப்பட்டுள்ளார். வெள்ளமடம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளமனம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்ட் அருகே வரும் போது நாகர்கோவிலில் இருந்து, வெள்ளமடம் நோக்கி ஒரு அரசு பேருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பேரிகார்ட் முன்பு நின்ற நிலையில் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (43) கண்டெய்னரை ஏற்றிக்கொண்டு லாரியில் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். வெள்ளமடம் அருகே வரும் போது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. எதிர்பாராதவிதமாக அய்யாத்துரை ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் லாரியின் முன்பகுதியில் சிக்கி இருசக்கர வாகனம் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இந்தநிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அய்யாதுரை கீழே விழுந்தார். அப்போது லாரியின் முன் டயர் அவர் மீது ஏறி நின்றது. இதனால் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி அய்யாதுரை பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் அறிந்ததும் பீபனகிரி ஊராட்சி மன்ற தலைவர் சஜிதா சுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். உடனே விபத்து குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து இரு பகுதியிலும் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை சரி செய்தனர். பின்னர் ஆரல்வாய்மொழி போலீசார் விபத்தில் சிக்கி பலியான அய்யாதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது பேத்தியின் பிரசவத்திற்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் விபத்தில் சிக்கி அய்யாதுரை பலியான சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பேரிகார்டால் விபத்து ஏற்பட்டதா?: காவல்கிணறு-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுகின்ற பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் ஆங்காங்கே பேரிக்கார்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளமடம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே பேரிக்கார்ட் அமைக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை நாகர்கோவிலில் இருந்து வெள்ளமடம் நோக்கி அரசு பேருந்து வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அய்யாதுரை பேரிக்கார்டு வைக்கப்பட்டு இருந்ததால் அரசு பேருந்து செல்வதற்காக பேரிக்கார்டு முன்பு தனது வாகனத்தை நிறுத்தி உள்ளார். இந்தநிலையில் பின்னால் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேரிக்காடு வைக்கவில்லை என்றால் அய்யாதுரை சென்றிருக்க கூடும். விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே காவல்துறையினர் பேரிக்கார்டு வைக்கின்ற போது விபத்து ஏற்படாதவாரு வைக்க வேண்டும் என்றும், இதுபோன்று வளைவான பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டால் பெரிய விபத்து ஏற்படுகின்ற சூழ்நிலை உள்ளது, ஆகவே அதனையும் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகனுடன் பைக்கில் சென்ற பெண் பலி
திங்கள்சந்தை: வேர்க்கிளம்பி காட்டுவிளையை சேர்ந்தவர் முகமது இர்பான் (38). துணி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை தனது தாயார் நசீரா (55) என்பவரை அழைத்து கொண்டு பைக்கில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.வில்லுக்குறி பாலம் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நசீரா மீது டாரஸ் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய நசீரா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் முகமது இர்பான் பலத்த காயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து முகமது இர்பான் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டாரஸ் லாரி டிரைவர் காக்கச்சல் மணியன்குழியை சேர்ந்த மைக்கேல்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியான அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பைக் மோதி முதியவர் பலி
புதுக்கடை: புதுக்கடை அருகே ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜமணி (84). திருமணமாகவில்லை. நேற்று மாலை சானல்முக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சடையன்குழி பகுதியை சேர்ந்த கவிராஜ் (52), பாலோடு பகுதியை சேர்ந்த ஞானசிகாமணி (43) ஆகியோர் பைக்கில் சென்றுள்ளனர். பைக்கை கவிராஜ் ஓட்டி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நடந்து சென்ற ராஜமணி மீது பைக் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜமணி பரிதாபமாக இறந்தார். பைக்கை ஒட்டிய கவிராஜும் படுகாயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞானசிகாமணிக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.