பீஜிங்,
சீனாவின் அதிபராக பதவி வகித்து வந்த ஜீ ஜின்பிங் போட்டியின்றி, மூன்றாவது முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சீனாவின் மத்திய ராணுவ ஆணைய தலைவராகவும் ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிபர் பதவியில் 2 முறையே நீடிக்க முடியும் என்று இதுவரை இருந்து வந்த விதிமுறைகள் திருத்தப்பட்டன. இதனால், 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அந்த பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீப சீன வரலாற்றில் சக்தி வாய்ந்த தலைவராக பார்க்கப்படும் ஜின்பிங்குக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர்கள், அதிகாரிகள் அவருக்கு விசுவாசமுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சர்வதேச அரசியல் மற்றும் அதிகாரம் ஆகியவற்றை மறுவடிவம் செய்யும் இலக்குகளை சீனா கொண்டு உள்ளது.
இந்த சூழலில், பதற்றம் நிறைந்த உக்ரைன் போரில் அந்நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் உதவி கரம் நீட்டியுள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவாக சீனா செயல்பட கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
எனினும், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பெறும் வெற்றியால், சீனாவின் இலக்குகள் நிறைவடைய வழியேற்படும் என்பதுடன், பொருளாதார மற்றும் ராணுவ தலைமை கொண்ட நாடாக சீனா வளர்ந்து நிற்பதற்கும் உதவும் என ஆசிய டைம்ஸ் செய்தி நிறுவனம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது.
அதற்கேற்ப போரில் ரஷியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சீனா செயல்பட கூடும் என்று ஆசிய டைம்ஸ் பத்திரிகையில் போய்ஸ் மாநில பல்கலை கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியரான மைக்கேல் ஆலன் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் பீஜிங் நகரில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியையொட்டி ரஷியா மற்றும் சீன அதிபர்கள் இருவரும் சந்தித்து பேசி கொண்டனர்.
அப்போது, சர்வதேச அரசியலை மறுவடிவம் செய்வது பற்றிய கூட்டறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். அதில், அமெரிக்கா ஒரு பெரிய தலைவராக அல்லாத உலகம் ஒன்றை உருவாக்கும் வகையிலான மதிப்புகள் மற்றும் தொலைநோக்கு பார்வைகள் விரிவாக பகிரப்பட்டு இருந்தன.
இதன் வழியே சீனா மற்றும் ரஷியா என இரு நாடுகளும் அதிக அதிகாரம் மற்றும் செல்வாக்கை பெறும் வகையில் அறிக்கை விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இதற்கேற்ப சீன அதிபர் ஜின்பிங் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
இதன்படி, அடுத்த வாரம் அவர் ரஷியாவுக்கு சென்று அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பில், உக்ரைன் போரை நிறுத்துவதற்கான அமைதி நடவடிக்கைக்கு உறுதுணையாக சீனா செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கேற்ப, ரஷியாவுக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வருகை தரும்படி ஜின்பிங்குக்கு அதிபர் புதின் கடந்த ஜனவரி இறுதியில், அழைப்பு விட்டார். இதனை தொடர்ந்தே சீன அதிபரின் ரஷிய பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.