காரைக்கால் ராஜாத்தி நகரைச் சேர்ந்தவர் கைலாஷ் (36). இவர், காரைக்கால் பெரமசாமி பிள்ளை வீதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு 10-ம் தேதி மர்ம நபர் ஒருவர் வந்து, தன்னிடம் 12 பவுன் செயின் இருப்பதாகவும், அதை அடகு பிடித்துக் கொண்டு, பணம் தரும்படியும் கேட்டிருக்கிறார். அந்த நபரிடம் நகையை கைலாஷ் வாங்கி சோதனை இயந்திரத்தில் பரிசோதித்ததில், 916 தங்க நகை என்றும், 12 பவுன் இருப்பதாகவும் காட்டியிருக்கிறது. இருந்தும் நகையில் சற்று சந்தேகம் எழவே, தன்னுடைய சித்தப்பா பாலமுரளிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார் கைலாஷ். உடனடியாக கைலாஷின் கடைக்கு வந்த பாலமுரளி, அந்த நகையை சோதித்தார்.
அந்த செயினை துண்டித்து பரிசோதித்தபோது, செப்புக்கம்பியில் தங்கமுலாம் பூசியிருந்தது தெரியவந்தது. அதையடுத்து, நூதன முறையில் போலி நகையை அடமானம் வைக்க வந்த நபர் குறித்து விசாரித்தபோது, அவர் காரைக்கால் சின்னக்கண்ணு செட்டித் தெருவைச் சேர்ந்த பரசுராம் (45) என்பது தெரியவந்தது.
இது குறித்து கைலாஷ் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் பரசுராமை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பரசுராமிடம் நகையைக் கொடுத்து விற்கச் சொன்னது, திருவாரூர் மாவட்டம், கொல்லாபுரத்தைச் சேர்ந்த ரிபாத் காமில் (30) என்பது தெரியவந்தது. இவர் காரைக்கால் திருநள்ளாறு சாலையில் எலெக்ட்ரானிக்ஸ் கடை நடத்திவந்ததும் தெரியவந்தது. அதையடுத்து, போலி நகையை விற்க முயன்ற பரசுராம் (45), போலியான நகையை விற்கச் சொன்ன கொல்லாபுரத்தைச் சேர்ந்த ரிபாத் காமில் (30) ஆகிய இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்த நகர காவல் நிலைய போலீஸார், கைதுசெய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி காவல்துறையில் நிரவி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெரோம் ஜெசிமென்ட் (40), நேதாஜி நகரைச் சேர்ந்த பிரபல அழகி புவனேஸ்வரி (35), ரமேஷ் (45) ஆகியோர் காரைக்காலில் போலி நகைகள் விற்பனையில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமானது.
மேலும் போலீஸாரின் விசாரணையில் அழகி புவனேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் ஜெரோம் இருவரும் கோவை சென்று போலி தங்கநகையை தயாரித்து வாங்கியது தெரியவந்தது. போலீஸார் தேடுவது தெரிந்ததும் புவனேஸ்வரி தலைமறைவாகிவிட்டார். புவனேஸ்வரி போலி நகைகளை ரிபாத் காமில், பரசுராமிடம் கொடுத்து காரைக்கால் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் தமிழக மாவட்டங்களிலுள்ள வங்கிகள், அடகு கடைகளில் வைத்து கோடிக்கணக்கில் பணம் பெற்றிருப்பதும் போலீஸாருக்குத் தெரியவந்தது. அதையடுத்து, காரைக்கால் எஸ்.எஸ்.பி லோகேஸ்வரன் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் தலைமறைவாக இருந்த முன்னாள் சப் இன்பெக்டர் ஜெரோம் ஜெசிமென்ட், ரமேஷைக் கைதுசெய்து காரைக்கால் முதன்மை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
தலைமறைவாக இருக்கும் புவனேஸ்வரியை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே, இரு தினங்களுக்கு முன்பு காரைக்காலிலுள்ள புதுச்சேரி அரசு வங்கியான புதுவை பாரதியார் வங்கிக் கிளை லாக்கரில் உள்ள நகைகளை வருடாந்திரக் கணக்குக்காக வங்கி மேலாளர் அருண் தலைமையிலான வங்கி ஊழியர்கள் சரி பார்த்தனர். அப்போது வங்கியில் புதுத்துறையை அடுத்த தருமபுரத்தைச் சேர்ந்த முகமது மைதீன் என்பவரின் வங்கிக் கணக்கின்மீது சந்தேகம் ஏற்பட்டது. இவர் வங்கியில் அடகு வைத்திருந்த தலா 15 பவுன் கொண்ட இரு செயின்களை பரிசோதித்தனர். அதில், முகமது மைதீன் மேற்கண்ட வங்கியில் அடகு வைத்திருந்தது போலி நகை என்பது தெரிந்தது. இது குறித்து வங்கி முதன்மை மேலாளர் அருண் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார்மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், தலைமறைவான முகமது மைதீனைத் தேடி வருகின்றனர்.
நகைக்கடையில் போலி நகைகளை வைத்து பணம் பெற முயன்ற கும்பலுக்கும், வங்கியில் போலி நகையை வைத்து மோசடி செய்த முகமது மைதீனுக்கும் நேரடித் தொடர்ப்பிருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனவே போலி நகைகள் மோசடி விவகாரத்தில் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் புவனேஸ்வரி பிடிபட்டால் பல முக்கிய தகவல்கள் கிடைக்குமென போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், போலீஸாரால் கைப்பற்றப்பட்ட நகைகளில், காரைக்காலில் பிரபல கடையின் முத்திரை காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நகைகளை பிரபல கடைகளின் முத்திரையுடன் புவனேஸ்வரி கும்பல் வாங்கி, அவற்றை வங்கிகளிலும், கடைகளிலும் அடகு வைத்த விஷயமும் வெளிவந்திருக்கிறது. இப்படி போலி நகைகளை வாங்கி அடமானம், விற்பனை செய்த பரிவர்த்தனை ரூ.5 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து காரைக்கால் எஸ்.எஸ்.பி லோகேஸ்வரனிடம் பேசினோம். “அந்தப் பெண்ணைப் பிடிப்பதற்கு ஒரு டீம் அமைத்து தேடி வருகிறோம். மேலும், உள்ளூரில் இது போன்று வேறு எங்கெல்லாம் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று விசாரித்து வருகிறோம். நிறைய பேர் பல்வேறு காவல் நிலையங்களில் இது தொடர்பாக புகாரளித்து வருகின்றனர். எனவே, விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்” என்றார்.