மகன், மகள்கள் சொத்தை அபகரித்து விட்டனர்… பேத்தியுடன் வந்து முதியவர் மனு!

கோவை மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். (வயது 80) இவரது மனைவி பட்சியம்மாள். இவர்களுக்கு ஆனந்தகுமார் என்ற மகனும், பார்வதி, பாக்கியலட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகிய நிலையில், ஆனந்தகுமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நடராஜன் தனியார் மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தனது பணி ஓய்வுக்குப் பிறகு செக்யூரிட்டியாக பணிபுரிந்த நடராஜன் வயோதிகம் காரணமாக தற்போது வேலைக்குச் செல்வதில்லை. தனது வருமானத்தில் நடராஜன் மணியகாரம்பாளையம் பகுதியில் 7 சென்ட் இடத்தில் வீடு ஒன்றை வாங்கி வசித்து வந்தார். 

இதனிடையே நடராஜனின் மகனும், மகள்களும் அவரிடம் இருந்து வீட்டை எழுதி வாங்கியுள்ளனர். வீட்டை எழுதி வாங்கியவுடன் இனிமேல் இந்த வீட்டில் வசிக்கக்கூடாது என்று கூறி முதியவரை வெளியில் அனுப்பியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன், இதுகுறித்து கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய வட்டாட்சியர், ஆனந்தகுமார், பார்வதி மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய மூவரும் மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாயை நடரஜனுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தார். 

ஆனால் இதுவரை முதியவருக்கு அந்த பணத்தை கொடுக்காத அவரது குழந்தைகள், தற்போது மீண்டும் வீட்டை விட்டு துரத்துவதாகவும், மீறி தங்கினால் தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாகவும் நடராஜன் குற்றம்சாட்டுகிறார். இதனிடையே மூவர் மீதும் நடவடிக்கை எடுத்து, தனது வீட்டை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடராஜன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது பேத்தியுடன் வந்து மனு அளித்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “உழைத்து சம்பாதித்து வாங்கிய வீட்டில் எனது குழந்தைகளே என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். எனது வீட்டை மீட்டுத்தர வேண்டும்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.