முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த 10ஆம் திகதி இரவு வெளிநாடொன்றுக்கு பயணம் மேற்கொள்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பி அனுப்பப்பட்டமை தொடர்பிலே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஊழியர்கள் இருவரும் பணி இடைநீக்கம்
அறிக்கையை வெளியிட்ட அந்த திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம், பெறப்பட்ட தகவலின்படி, நாடாளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் வேறொரு நபருடையது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாடு செல்வதற்கான உரிமை சட்டவிரோதமான முறையில் தடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இச்சம்பவத்திற்கு காரணமான ஊழியர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியோர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தனது அறிக்கையில், விமான நிலையத்தில் ஏற்பட்ட அசௌகரியத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.