மாதவரம் பேருந்து நிலையம்; 50 மீட்டர் நீள பாலம்… அசத்தல் மெட்ரோ கனெக்‌ஷன் ஏற்பாடுகள்!

தலைநகர் சென்னையில் முதல்கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ் நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக ஊதா, சிவப்பு, காவி ஆகிய மூன்று வழித்தடங்களில் 2026ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) முக்கிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

மாதவரம் பேருந்து நிலையம்

அதாவது, மெட்ரோ ரயில் நிலையத்தை அருகிலுள்ள பேருந்து நிலையங்கள் உடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாதவரம் பேருந்து நிலையத்திற்கு (Madhavaram Bus Stand) அருகில் ஜி.என்.டி சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் வருகிறது. இங்கு மல்டி மாடல் போக்குவரத்து வசதிகளை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஊதா வழித்தட மெட்ரோ திட்டம் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைகிறது.

மெட்ரோ ரயில் நிலையம்

இதில் மாதவரம் பேருந்து நிலையம் அருகில் அமையும் மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் 50 மீட்டர் பாலம் கட்டப்பட உள்ளது. இது பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவரம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை சென்னையில் இருந்து ஆந்திரா, நெல்லூர், திருப்பது, காளஹஸ்தி செல்லும் பேருந்துகளுக்கு தனி பேருந்து அமைக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டது.

என்னென்ன வசதிகள்?

இதற்காக 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 8 ஏக்கரில் 94.16 கோடி ரூபாய் மதிப்பில் மாதவரம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரம்மாண்ட நுழைவு வாயில், பயணிகள், போக்குவரத்து ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகள், இருக்கை வசதிகள், தொலைக்காட்சி பெட்டிகள், சோலார் மின்சாரம் தயாரிக்கும் வசதிகள் உள்ளிட்டவற்றுடன் புதுப்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா செல்லும் பேருந்துகள்

விரைவில் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து முழுமையாக மாதவரத்திற்கு மாற்றப்படும். இதன்மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் சுமை குறைக்கப்படும். மாதவரம் பேருந்து நிலையம் போன்று தென் மாவட்டங்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கம் ரெடி

இது அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களை அருகிலுள்ள பிற போக்குவரத்துடன் இணைக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

CUMTA திட்டம்

அருகிலுள்ள பேருந்து நிலையங்கள் அல்லது புறநகர் ரயில் நிலையங்கள் உடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வழித்தடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக CUMTA சென்னை மாநகராட்சி உடன் இணைந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி உலக வங்கியிடம் இருந்து நிதியுதவி பெற்று புதிய போக்குவரத்து வழித்தட அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.