புதுடெல்லி: இந்தியாவில் 113 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்புக்கு கேரளாவில் ஒருவர் பலியானார். இதுகுறித்து ஒன்றிய சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 524 ஆகி உள்ளது. 113 நாட்களுக்கு பின் தினசரி பாதிப்பு கடந்த 10ம் தேதி 400ஐ தாண்டியது. அன்று ஒரே நாளில் 441 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. நேற்றுமுன்தினம் பாதிப்பு 456 ஆனது.
இந்நிலையில் நேற்றும் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் 19ம்தேதி பாதிப்பு 556 ஆக இருந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் 500ஐ தாண்டி உள்ளது. தற்போது மொத்தம் 3,618 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4.46 கோடி ஆகி உள்ளது. கேரளாவில் ஒருவர் மரணமடைந்ததால் பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 781 ஆகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.