அமிர்தசரஸ்: பஞ்சாப் அமைச்சரை, அம்மாநிலத்தில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவ் திருமணம் செய்து கொள்ள உள்ளதால் ஆம்ஆத்மி கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி மூத்த தலைவரும், கல்வி அமைச்சருமான ஹர்ஜோத் பெய்ன்ஸுக்கும், ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் ெசய்யப்பட்டது. இவர்களுக்கு இம்மாதம் திருமணம் நடைபெற உள்ளது. 2019 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஜோதி யாதவின் குடும்பத்தினர் குருகிராமில் வசித்து வருகின்றனர். தற்போது இவர், மான்சா மாவட்ட போலீஸ் எஸ்பியாக பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பு லூதியானாவில் ஏடிசிபியாக பணியாற்றினார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜோதி யாதவ், தற்போது போலீஸ் சீருடை தவிர, மற்ற உடைகளிலும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர்களது திருமணத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். கடந்தாண்டு ஜூலை மாதம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது அவரது அமைச்சர் ஒருவருக்கு திருமணம் நடப்பது ஆம்ஆத்மி கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.