ராமேசுவரம்: டியாகோ கார்சியா தீவில் கைதான தமிழக, கேரள மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தமிழக மீன்வளத் துறை தெரிவித்தது.
இந்தியப் பெருங்கடலில் கன்னியாகுமரிக்கு தெற்கே 2,200 கடல் மைல் தொலைவில் உள்ளது பிரிட்டனுக்கு சொந்தமான ‘டியாகோ கார்சியா’ என்ற தீவு. இங்கு அமெரிக்கா தனது விமானப்படை தளத்தை நிறுவி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பிப்.9-ம் தேதி ரெஜின் என்பவருக்குச் சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் என மொத்தம் 16 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் பிப்.23 அன்று இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது டியாகோ கார்சியா தீவு அதிகாரிகளால் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர். மீனவர்களை விடுதலை செய்ய அங்குள்ள நீதிமன்றம் இந்திய மதிப்பில் ரூ.23 லட்சம் அபராதம் விதித்தது.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, அபராதம் ரூ.2 லட்சமாக குறைக்கப்பட்டு அபராதத்தைச் செலுத்திய பின்னர் படகுடன் 16 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையான மீனவர்கள் சில நாட்களில் தேங்காய்பட்டினம் வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவலை தமிழக மீனவளத் துறை உறுதிப்படுத்தி உள்ளது.