விமான கழிப்பறையில் புகை பிடித்தவர் போலீசிடம் ஒப்படைப்பு: ஏர் இந்தியா நடவடிக்கை

மும்பை: ஏர் இந்தியா விமானத்தில் கழிப்பறையில் புகை பிடித்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்ததாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் ஏஐ130 மார்ச் 10ம் தேதி லண்டனிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. அதில் பயணித்த ஒரு நபர் கழிப்பறையில் புகை பிடித்துள்ளார். விமான ஊழியர்கள் பலமுறை எச்சரித்தும் அவர் தொடர்ந்து புகை பிடித்ததுடன், ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து விமானம் மும்பை வந்தவுடன், அந்த நபரை மும்பை போலீசாரிடம் விமான ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் முறையாக விமான நிறுவனம் புகார் அளித்துள்ளது.  

ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மும்பையை சேர்ந்தவர், குடிபோதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நவம்பர் மாதம் நடந்த சம்பவம் குறித்து ஜனவரி 4ம் தேதி தான் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு ஏர் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், விமானியின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போதைய சம்பவம் தொடர்பாக உடனடியாக ஏர் இந்தியா புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.