காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், 2004-2009 வரை ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கியதாக புகார் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லி, பாட்னா, மும்பை, ராஞ்சி ஆகிய நகரங்களில் லாலுவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான 24 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் லாலு பிரசாத் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்குகளில் ரூ.600 கோடி அளவிலான சொத்துகள் கைமாறியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பீகார் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய, லாலு பிரசாத்தின் மகனும், மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், “600 கோடி ரூபாய் மதிப்பிலான குற்றச் செயல்களைக் கண்டுபிடித்ததாக அமலாக்க இயக்குநரகம் கூறுவது உண்மையல்ல. என்னுடைய சகோதரிகள் மற்றும் அவர்களது மாமியார்களின் பயன்படுத்தப்பட்ட நகைகளின் படங்கள் எடுக்கப்பட்டு சோதனையில் மீட்கப்பட்ட பொருள்களாகக் கூறப்பட்டிருக்கின்றன. அமலாக்க இயக்குநரகம் 30 நிமிடங்களில் சோதனையை முடித்துவிட்டு, மேலிருந்து (மேலிடத்திலிருந்து) அனுமதி பெற டெல்லி இல்லத்தில் காத்திருந்தது.
நாங்கள் பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் போல அல்ல. நாங்கள் உண்மையான சமூக அரசியல் பயிலும் மாணவர்கள். எங்களுக்கு நம்பிக்கையும் பொதுமக்களின் ஆதரவும் இருக்கிறது. ஆனால் அவர்கள் பயந்து, அரசியல் போரிலிருந்து தப்பி ஓட முயல்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, இந்த ஏஜென்சிகளுக்கு நீங்கள் திரும்பத் திரும்ப தரும் ஒரே ஸ்கிரிப்டையாவது மாற்றுங்கள்” என்றார்.