திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே ஆலாடு பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், இவரது வீட்டின் கீழ் தளத்தில் மோகனின் தங்கை நந்தினி என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் அதேப் பகுதியில் புதிய வீடு ஒன்று கட்டி அங்கு குடியேறினார்.
அதன் பின்னர் அவர் தான் ஏற்கனவே வசித்த வீட்டின் சாவியை மோகனின் தம்பியான பொன்னேரி நகராட்சியின் பதினேழாவது வார்டு கவுன்சிலரான இளங்கோவிடம் கொடுத்துள்ளார். இதையறிந்த மோகனின் மகள் காயத்திரி வீட்டின் சாவி கொடுத்தது குறித்து இளங்கோவிடம் கேட்டுள்ளார்.
இதனால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு சிறிது நேரத்திலேயே கைகலப்பாக மாறியது. மேலும், இந்த விவகாரத்தில் காயத்திரிக்கு ஆதரவாக வந்த பாலமுருகன் என்ற வாலிபரும் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பன்னிரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே கவுன்சிலர் இளங்கோ, உறவுக்கார பெண்ணை தாக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் பரவி வைரலானது.
இது தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கவுன்சிலர் இளங்கோ தலைமறைவாகியுள்ளார். இதனால், போலீசார் இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள் ஐந்து பேரை தனிப்படை ஒன்று அமைத்து தேடி வருகின்றனர்.