கமுதி மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து போஸ்டர்கள் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்மாவட்டங்களில் அதிக அளவு ஓபிஎஸ்சுக்கு ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிவகங்கை வந்து சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வால்போஸ்டர்களும் அவரை ஆதரித்து வரவேற்று வைத்திருந்த விளம்பர பதாகைகளும் இரு தரப்பினரால் கிழித்தெறியப்பட்டது.
இந்த சம்பவத்திற்காக ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டு முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினர்கள் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் முதுகுளத்தூரில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஓபிஎஸ் தரப்பினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் “அதிமுகவை 8 முறை தோல்வி பெற செய்த எடப்பாடியே வெளியேறு.! சமத்துவ பேரியக்கத்தை சமுதாய இயக்கமாக மாற்றிய எடப்பாடியே வெளியேறு !’ என்ற வாசகங்கள் அடங்கிய 2 மாடல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. கோகமணி மற்றும் அம்மா சரவணன் (மீனவர் அணி), மற்றும் அம்மா சரவணன், வினோத்குமார், சீமைச்சாமி ஆகியோர் பெயர் பதிவிட்டு இந்த போஸ்டர்கள் கமுதி, முதுகுளத்தூர் பகுதி முழுவதும் பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதால் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.