புதுடெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் அரசு தொல்லை தருகிறது என்று மார்க்சிஸ் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர்களைத் துன்புறுத்துவதற்காக அமலாக்க இயக்குநரகம், சிபிஐயை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே எந்த பிளவும் இல்லை. அதே சமயம் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து அமலாக்கத்துறை வழக்குகளிலும் தண்டனை விகிதம் என்ன? 0.5 சதவிகிதம்? சட்டத்தை மீறியவர்களிடம் மட்டுமே நாங்கள் விசாரணை நடத்துகிறோம் என்று நீங்கள் சொன்னால் பிறகு ஏன் தண்டணை மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர்களைத் துன்புறுத்துவதற்கும், அவர்களை திசை திருப்புவதற்கும், அவர்களின் ஒற்றுமையை உடைப்பதற்கும் தான் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன என்பதையே இது நிரூபிக்கிறது. இதுவரை நடந்த சம்பவங்கள் அனைத்தும் அதை தெளிவுப்படுத்தி உள்ளன. ஏனெனில் விசாரணையில் சிக்கிய பிறகு பாஜவில் இணைந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் வழக்குகள் மட்டும் எப்படி உடனே மறைந்துவிடும்?. யார் மீது வழக்குகள் போடப்பட்டதோ அவர்கள் தங்கள் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்து விட்டால் போதும் அவர்களின் வழக்குகள் காணாமல் போய்விடுவது எப்படி?. எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் ஆபத்தில் இருந்தபோது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தன. இன்று ஜனநாயகம் மீண்டும் ஆபத்தில் இருக்கும் போது, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்து உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.