முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ என்ற தலைப்பில் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்துவருகிறார். அதில் சமீபத்தில் ஒருவர், “கவர்னர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்திருக்கிறதே… கவர்னர்கள் இதற்குச் செவிமடுப்பார்கள் என நினைக்கிறீர்களா?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விக்கு, “இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால், கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது” என்று முதல்வர் பதில் சொல்லியிருந்தார். சமீபகாலமாகவே தமிழ்நாடு ஆளுநருக்கும், ஆளும் அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பிய விவகாரம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த நிலையில், முதல்வரின் இந்தக் கருத்து குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னாவிடம் பேசினோம். “தமிழ்நாட்டின் நிலையைத் தளபதி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். காதுகளிருந்தும் கேட்காத, வாய் இருக்கிறது என்று மட்டும் வக்கணையாகப் பேசும் ஆளுநர் பொறுப்பே அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து அகற்றப்படவேண்டும். ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக இந்திய இறையாண்மையைச் சிதைக்கிற, அயோக்கியத் தனத்தை ஆளுநர் ஆர்.என் ரவி செய்துகொண்டிருக்கிறார். தொடர்ந்து மக்கள் நலனுக்காகச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்டு, மக்கள் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையால் ஜனநாயக மாண்பின்படி சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது. ஆனால், ஆளுநர் அந்தச் சட்டங்களைத் தூக்கி குப்பையில் போட்டு, அவற்றின்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு ஆவர்த்தனம் செய்கிறார்.
அதோடு, ஆளுநருக்கு உண்டான பணியைச் செய்யாமல், ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்துகொண்டு மக்களின் வரிப்பணத்தில் ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்கான பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார். அவரின் இந்தச் செயல்பாடுகளுக்கு நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறோம். அதையெல்லாம் கேட்காமல், செவிமடுக்காமல், காதுகளை மூடிக்கொண்டு, தனக்கு வாய்மட்டும்தான் இருப்பதுபோல, வரலாற்றுத் திரிபுகளை மக்கள் மனங்களில் விதைக்கக்கூடிய விஷமத்தனத்தைச் செய்துகொண்டிருக்கிறார். இன்னும் குறிப்பாக, ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்காக கொடுக்கப்பட்ட விலை 44 உயிர்கள். இருந்தபோதும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை விருந்தினர்களாக ஆளுநர் மாளிகைக்கு அழைத்து, அவர்களுடன உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருக்கிறார். மக்களுக்கானச் சட்டங்களை நிறைவேற்றுவதுதான் ஆளுநரின் கடமை. அதைவிட்டுவிட்டு, ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்காக வாதாடும் அயோக்கியத்தனத்தை ஆளுநர் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்” என்றார் காட்டமாக.
முதல்வரின் கருத்து குறித்து தமிழ்நாடு பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தத்திடம் பேசினோம். “ஆளுநரை விமர்சனம் செய்ய இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆளுநர் அரசின் அனைத்து கோரிக்கைகளையும் செவிமடுத்துக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால், திறனற்ற தி.மு.க அரசின் காதுகளுக்குத்தான் தமிழ்நாடு மக்களின் கோரிக்கை எதுவும் கேட்பதில்லை. `தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளில் 85 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டோம்’ என்று முதல்வர் சொல்கிறார். `70 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டோம்’ என்று உதயநிதி சொல்கிறார். `50 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டோம்’ என்று தி.மு.க அமைச்சர்கள் சொல்கிறார்கள். இவர்கள் அனைவருமே நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் மட்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எதுவும் செய்யவில்லை என்று மக்கள் குரல் எழுப்பவே, இந்த விவகாரத்தைத் திசைதிருப்ப ஆளுநரை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க குறித்துப் பேசினால் வழக்கு பதிவுசெய்யும் இந்த அரசு, ஆளுநரைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தவர்கள்மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறதா. தி.மு.க-வினரைப் பொறுத்தவரைத் தலையாட்டி பொம்மை போல இவர்கள் சொல்வதை மட்டும் கேட்டு நடக்கும் ஆளுநராக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். அரசின் தவறுகளைத் தட்டிக்கேட்டால் மாநிலத்துக்கு எதிரான ஆளுநர் என்று போர்க்கொடி தூக்குவது தி.மு.க-வின் வரலாறு. தி.மு.க-வுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோரே வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசைக் கேள்வியெழுப்பும் நிலையில்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க-வினர் குடும்பத்தைத் தவிர, இந்த ஆட்சியில் எந்த வகையிலும் மக்கள் பலனடையவில்லை” என்றார்.