குடிபோதையில் பெண் பயணிமீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் – உடனடியாக டிஸ்மிஸ் செய்த ரயில்வே!

அமிர்தசரஸ்-கொல்கத்தா சென்ற ரயிலில் பெண் பயணி ஒருவர் தலையின்மீது, டிக்கெட் பரிசோதகர் ஒருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாகப் புகார் எழுந்த நிலையில், இன்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த நபர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ரயில்

பீகாரைச் சேர்ந்தவராக அறியப்படும் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை, இது தொடர்பான புகாரின் அடிப்படையில் நேற்று (13-3-23) லக்னோவில் வைத்து போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். புகாரளித்த பெண், தன்னுடைய கணவர் ராஜேஷ் குமாருடன், அகல் தக்த் எக்ஸ்பிரஸின் ஏ1 பெட்டியில் பயணம் செய்ததாக ரயில்வே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு, சம்பவத்தன்று முன்னா குமார் விடுமுறையில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அப்போதுதான், முன்னா குமார் மதுபோதையில் அந்தப் பெண் பயணிமீது சிறுநீர் கழித்திருக்கிறார்.

இதையடுத்து முன்னா குமாரின் இந்தச் செயலை கண்டித்து வடக்கு ரயில்வே அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில், “பெண்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது கண்டனத்துக்குரியது. இத்தகைய செயல்பாட்டால் உங்கள் சொந்த சுயமரியாதைக்கு மட்டுமல்லாது, முழு ரயில்வே துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வடக்கு ரயில்வே கடிதம்

இந்த நிலையில், வடக்கு ரயில்வே துறையின் இந்தக் கடிதத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு, “இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது. உடனடியாக அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.