சென்னை: மணல் குவாரிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்கும் வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக சென்னை உயர் நீ திமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வேலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கஜராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘வேலூரில் உள்ள பெருமுகை ஊராட்சியின் அரும்பருத்தி பகுதியில், பாலாற்றில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 1 மீட்டர் ஆழத்தையும் தாண்டி, அதிகமாக மணல் எடுப்பதால், இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. இந்த விதிமீறல்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், “மணல் குவாரிகளில் மணல் அள்ள பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த அரசாணை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது. குவாரிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையையும், மணல் அள்ளுவது தொடர்பாக நிபந்தனைகள் விதித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் திங்கட்கிழமை தள்ளிவைத்தனர்.