க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்,
நாட்டின் வரலாற்றில் மாணவர்களின்; எதிர்கால கல்விக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆசிரியர்கள் செயற்பட்டதில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில அரசியல் தேவைகளுக்கு ஏற்ப தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டு செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களை வீதிக்கு இறக்கி போராட்டங்களை நடத்துவது மிகவும் துரதிஷ்டவசமான நிலையாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடுசெய்வதில் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினை குறித்து கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதுடன், நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் விடைத்தாள்களை மதிப்பீடுசெய்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை 100 வீதத்திற்கு மேல் அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டார் என்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.