விருதுநகர்: சீசன் துவங்கியதையடுத்து விருதுநகரில் கொடிக்காய் விற்பனை சூடுபிடித்துள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். விருதுநகர் அருகே தாதம்பட்டி மீசலூர், மருளத்தூர், இனாம் ரெட்டியாபட்டி, செந்நெல்குடி ஆகிய பகுதிகளில் கொடிக்காய் விவசாயம் நடைபெறுகிறது. கொடிக்காய் எல்லா வகை மண்ணிலும் செழித்து வளரும் தன்மை கொண்டது. விவசாயிகள் தனி மரமாகவும், 5 முதல் 10 மரம் என தோப்பாகவும் வளர்க்கின்றனர். வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடியது என்பதால் விவசாயிகள் இதனை விரும்பி வளர்க்கின்றனர். இடைத்தரகர் இன்றி விவசாயிகள் நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்யக்கூடிய பழம் என்பதால் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது கொடிக்காய் பழம். மருத்துவ குணம் கொண்ட இந்த கொடிக்காய் வயிற்றுப் புண் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது என்பதால் இதனை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். சீசன் மாதங்களான மாசி, பங்குனி மற்றும் சித்திரை ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே இப்பழம் கிடைக்கும்.
தற்போது சீசன் துவங்கியுள்ளதால் விருதுநகரில் கொடிக்காய் விற்பனை சூடுபிடித்துள்ளது. கொடிக்காய் துவர்ப்பான பழம் கிலோ 200 ரூபாய்க்கும், இனிப்பான பழம் கிலோ 240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த மாதம் 300 ரூபாய் வரை விற்பனை ஆன கொடிக்காய் வரத்து அதிகரிப்பால் தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.