தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ( மார்ச் 14) சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE’23 50ஆவது மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், மனோ தங்கராஜ், சென்னை மேயர் பிரியா, மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டார். “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தகவல் தொல்நுட்பத் துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திக் காட்டினார்.
• திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் அதாவது 1997-ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்துக் கொடுத்தார்.
• அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை – எளிய மாணவர்கள் கணினி எனும் இயந்திரத்தை நேரில் பார்த்திராத காலகட்டத்தில், அவர்களுக்கு கணினிக் கல்வியைத் தந்தார்.
• 1999-2000-ஆம் ஆண்டே, பள்ளிப் பாடத் திட்டத்தில் மட்டுமின்றி, கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட கல்விப் பாடத்திட்டங்களிலும் கணினி பாடத்தை அவர் கொண்டுவந்தார்.
• 1996-2001 ஆட்சிக் காலத்திலேயே ‘Empower IT’ என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி, தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பட்டிதொட்டிகள் எல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு சென்றார்.
• அப்போதே Mobile Governance, E-Governance போன்றவை அரசு அலுவலகங்களில் – அரசு சேவைகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
• தமிழ்நாட்டில் IT Professionals ஏராளமாக உருவாகக் காரணமாக இருந்தார்.
• தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேடி வந்து தேர்வு செய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை அவர் மாற்றிக் காட்டினார்.
• தகவல் தொழில்நுட்பத்துக்கு என தனித் துறையையும் 1998-ஆம் ஆண்டிலேயே உருவாக்கி, அதற்கு தனி அமைச்சரையும் நியமித்தார்.
• கணினி என்ற பெயரைப் பலரும் கேள்விப்படுவதற்கு முன்னதாகவே, டைடல் பார்க்கை தமிழ்நாட்டில் அமைத்த தொலைநோக்கு பார்வை கொண்டவர்தான் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். 1997-இல் தரமணியில் டைடல் பார்க்கை உருவாக்கிட அதற்கென புதுக் கொள்கையினை உருவாக்கி, ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டடமாக அதனைக் கட்டி, 2000-ஆம் ஆண்டில் அதனைத் திறந்து வைத்து, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்தார்.
• தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு நிகழ்த்தியிருக்கும் இன்றைய சாதனை, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த வெற்றிதான் என்று நாம் உறுதியோடு சொல்லமுடியும்.
மற்ற மாநிலங்களை விட தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ்நாடு முன்னேறி இருக்கக் காரணம் தலைவர் கலைஞர் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்” என்று கூறினார்.
மேலும் அவர் தமிழக அரசு தற்போது முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்தும் பேசினார். “* தகவல் தொலைத் தொடர்பு சார்ந்த தேசிய மின் ஆளுமைத் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் பல்வேறு மின் ஆளுமைத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
* தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் சார்பில் உயர் கல்வி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து வருகிறது.
* 2009-ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அகாடமி (ICTACT) தொடங்கப்பட்டது.
ஆசிரியர் மேம்பாடு, மாணவர் திறன் மேம்பாடு, இளைஞர் மேம்பாடு, டிஜிட்டல் மேம்பாடு, தொழில்-நிறுவன ஆராய்ச்சி, ஆய்வு இதழ் வெளியீடுகள் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனத்தின் செயல்பாடு உள்ளபடியே பாராட்டுக்குரியது.
ஐ.சி.டி. அகாடமி முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வை கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்துவதற்கு மாநாடுகளை நடத்தி வருவது உள்ளபடியே பாராட்டத்தக்கது. இத்தகைய கருத்தரங்குகள், மாநாடுகள், பயிற்சிகள் வாயிலாக, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும், மாநிலத்தில் நிலவும் திறன் இடைவெளி குறைந்திடவும் வழிவகை செய்யும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சூழ்நிலையில், அதன் வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அதை விரைவுபடுத்தவும் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. இதனால் தமிழ்நாடு பொருளாதார வளம், அதிகரித்த வேலைவாய்ப்பு என இரட்டைப் பலன்களை அடையமுடியும்.
IT உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குதல் மற்றும் மாநில குடும்ப தரவுத் தளம், பிளாக்செயின் மற்றும் இ-அலுவலகம் மூலம் SMART நிறுவனத்தை நிறுவுவதன் மூலமாக சேவைகளை மேம்படுத்திட இயலும் என்பதால், தமிழ்நாடு அரசு அதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இதன்மூலம் குடிமக்கள் விரைவில் காகிதமில்லா, வெளிப்படைத்தன்மையுடனான சேவைகளை பெற இயலும். தரவுகள் எனப்படும் Data தான் இந்தக் காலத்தின் புதிய எரிபொருள்.
தமிழ்நாடு Data Centre பாலிசியை வெளியிட்டதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் Date Centre உட்கட்டமைப்பை உருவாக்க உதவும் முதல் நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்திட, தகவல் தொழில்நுட்பத் துறை, கல்வித்துறை மற்றும் நாஸ்காம் ஆகியவற்றில் சிறந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களைக் கொண்டு, “எதிர்காலத்திற்கான ஆலோசனைக் குழுவை” மாநில அரசு அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில், துடிப்பான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கிட, திறன் இடைவெளியைக் குறைப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதனை உணர்ந்துதான், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் மூலமாக, அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஐ.பி.எம். ஆகியவற்றின் மூலமாக 50 ஆயிரம் ஐ.டி. / கணினித் துறை மாணவர்களுக்கு 3-கிரெடிட், கட்டாயக் கற்றல் படிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பயிற்சியை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தகவல் தொழில் நுட்பத்திற்கு – இரண்டு பக்கம் உண்டு. அதனை எப்படி, எந்தளவுக்கு, எந்த நோக்கத்துக்கு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதனுடைய பயன்கள் இருக்கும்.
இளைய தலைமுறை தங்களது வளர்ச்சிக்கு இதனை பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது. தொழில் நுட்பங்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தும் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. வதந்திகளைப் பரப்பி சட்டம் ஒழுங்கை கெடுக்கவும் இதனை சில அரசியல் சக்திகள் பயன்படுத்துகிறார்கள். ஆபாச வலைத்தளங்களும் பெருகி வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை நித்தமும் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும்; நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். அனைத்துத் துறை வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் கொள்கைக்கு இந்த கருத்தரங்கு வலு சேர்க்கும் என நான் நம்புகிறேன்” என்று கூறினார்.