கிருஷ்ணகிரி அருகே செல்போனில் படம் பிடிக்க முயன்ற இளைஞரை காட்டு யானைகள் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்றையும் யானைகள் சேதப்படுத்தி உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் இந்த யானைகள் ஊருக்குள் வந்து விடும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு காட்டு யானைகளை ராம்குமார் என்ற இளைஞர் செல்போனில் படம் பிடிக்க முயன்றிருக்கிறார். அப்போது காட்டு யானைகள் தாக்கியதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டு யானைகள் சப்பாணிப்பட்டி என்னும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்தன. அப்போது நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரை காட்டு யானைகள் தாக்கியதில் கார் பலமாக சேதம் அடைந்தது.
அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்தவர்கள் உயிர்த்தப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியிலுள்ள மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் காட்டு யானைகளை வனப்பகுதிக்கு திருப்பி அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.