காஞ்சிபுரம்: தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவையொட்டி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில், அரசு பணியாளர்கள் ஆர்வம் குறித்து சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றபெற்ற டிசம்பர்27, 1956ம் ஆண்டை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 9ம்தேதி முதல் 16ம்தேதி வரை தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா நடைபெறும். இதில், கணினித்தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்பலகைகள் அமைத்திடுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, வணிக நிறுவன உரிமையாளர்கள், அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழி திட்ட விளக்கக்கூட்டம், விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில், தமிழ் ஆட்சிமொழி செயலாக்கத்தில், அரசு பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானதா? போதுமானது இல்லையா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில், பச்சையப்பன் மகளிர் கல்லூரி பயிலும் மாணவிகள் பேச்சாளர்களாக கலந்து கொண்டு சிறப்பான முறையில் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், தமிழ்த்துறை தலைவர் நஜ்மா, கல்லூரி முதல்வர் மலர்விழி, உதவி பேராசிரியர் பிரபா, 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.