காசியாபாத்: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தலித் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 6 பேருக்கு ஹாபூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் தவுலானா கிராமத்தில் கடந்த 2007ல் நடந்த திருவிழாவின் போது வைக்கப்பட்ட கடையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 16 வயது தலித் சிறுமியை இரண்டு பெண்கள் அழைத்து சென்றனர்.
அன்றிரவு திருவிழா முடியும் நேரத்தில் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கைப்பம்பு மூலம் தண்ணீர் எடுத்து வர அந்த சிறுமியை இரண்டு பெண்களும் அனுப்பி வைத்தனர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த கலுவா, ஆசிப், அக்தர், ஷா பைசல் ஆகிய வாலிபர்கள், சிறுமியை தோட்டத்திற்குள் அழைத்துச் சென்று வாயில் துணியை வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இவ்வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஹாப்பூர் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹிராலால், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதன்படி குற்றம்சாட்டப்பட்ட கலுவா, ஆசிப், அக்தர், ஷா பைசல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு பெண்களுக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின் தலித் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.