தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த நாகை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
நாகையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராமச்சந்திரன், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுவேதா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு தாம்பரம் ரயில் நிலையம் அருகே இருவரும் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுவேதாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதில் சுவேதா உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமச்சந்திரன், பிறகு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய ராமச்சந்திரன், நேற்று முன்தினம் இரவு தனது சொந்த ஊரான கீழ்வேளூரில், வீட்டின் பின்புறத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.