புதுடெல்லி: எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்க இருக்கிறது. முதல் கூட்டத்தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (மார்ச் 13) கூடின. அப்போது காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் இந்தியா குறித்த லண்டன் பேச்சுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் எழுப்பினர். இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக, இருஅவைகளும் முதலில் மதியம் 2 மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அப்போது மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையை மதியம் 2 மணிவரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்: அவை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக, அதானி விவகாரம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுன்ற வளாகத்தில் எதிர்க் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி ஆம் ஆத்மி, பிஎஸ்ஆர் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வாசலில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் எம்பிகளும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வாசலில் போராட்டம் நடத்தினர்.