காரைக்கால்: புதுச்சேரி அரசின் மின்துறை மூலம் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கண்டிப்பது, மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், குப்பை வரி ரத்து தொடர்பாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 14ம் தேதி (இன்று) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காரைக்கால் மக்கள் போராட்டக்குழு தெரிவித்திருந்தது. இதற்கு திராவிடர் கழகம், முஸ்லிம் லீக் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட ஒரு சில அரசியல் கட்சிகள், சில பொதுநல அமைப்புகள் ஆதரவு தெரிவித்தது.
அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் இன்று நடந்தது. மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காரைக்கால் நகரிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. அத்யாவசிய பொருட்கள் விற்பனையகமான மெடிக்கல், பால் கடைகள் திறந்திருந்தது. இதனால் காரைக்கால் நகர பகுதி இன்று காலை முதல் வெறிச்சோடி காணப்பட்டது. 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேசமயம் காரைக்காலில் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின.
கடையடைப்பு போராட்டத்தில் காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் பங்கேற்கவில்லை. இதனால் நகர பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு சில கடைகள், உணவகங்கள் வழக்கம்போல் இயங்கின. பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் பாதிக்காதவாறு காரைக்கால் மாவட்டத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இருந்து காரைக்கால் போராட்ட குழுவினர் பேரணியாக கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர் முகமது மன்சூரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.