புதுச்சேரி: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் தரப்படும். பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கப்படும். கல்வித் தரத்தை மேம்படுத்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடைமுறையை மாற்றி, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வகையில் அண்மையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
- தொகுதி வளர்ச்சி நிதியாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துணிப் பை வழங்கும் இயந்திரங்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி மறு சுழற்சிக்கு வழி செய்யும் இயந்திரங்கள் பொது இடங்களில் நிறுவப்படும். நொறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் சாலைகள் அமைக்கப் பயன்படுத்தப்படும்.
- புதுச்சேரி, காரைக்காலில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்தப்படும். மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் தீம் பார்க், ஓய்வு விடுதி, சாகச விளையாட்டுகள் அடங்கிய சுற்றுலாத் திட்டங்கள் நிறுவப்படும்.
- புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் உள்ளூர் பேருந்துகளில் அட்டவணையினப் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். உயர்கல்வி படிக்கும் பார்வைத்திறன் குறைபாடு உள்ள 50 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.25 லட்சத்தில் இலவச மடிகணினிகள் தரப்படும்.
- அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு மொத்தம் 12 சிலிண்டர்களுக்கு மானியம் தரப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.126 கோடி செலவாகும்.
- புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தோருக்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு, முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குழந்தை பிறந்தவுடன் ரூ.50 ஆயிரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 வருட காலத்துக்கு நிரந்தர வைப்புத்தொகையாக செலுத்தப்படும்.
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், ரூ.100 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் தொழில் தொடங்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க, நிலம், கட்டிடங்கள், இயந்திரங்களின் மதிப்பீட்டுக்கு தொழில் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து முதல் 5 ஆண்டு காலத்துக்கு, ஆண்டுக்கு 1 விழுக்காடு மானியம் வீதம் மொத்தம் 5 விழுக்காடு மானியம் தர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் அனைத்து சிவப்பு ரேஷன் அட்டைத்தாரர்களில் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய பிரிமீயம் தொகையை அரசு செலுத்தும்.
- புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் பொருட்டு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி தரப்படும். விரைவில் இலவச மடிக்கணினிகள் தரப்படும்.
- கல்வித் தரத்தை மேம்படுத்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும். நடப்பாண்டு திருக்காஞ்சியில் ரூ.1.66 கோடியில் மகா புஷ்கரணி விழா நடைபெறும்.