புதுக்கோட்டையில் புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலின் மாசிமகத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறும்.
முன்னதாக பிப்ரவரி 26-ம் தேதி அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா கோலகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டுத் திருவிழாவானது, மார்ச் 5-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
காப்பு கட்டியது முதலே, தினமும் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு, தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் தினமும், பால்குடம், காவடி எடுத்து வந்தும், அலகுக் காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டத் திருவிழா கோலகலமாக நடைபெற்றது. முன்னதாக, திருவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காட்டுமாரியம்மன் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டது.
உற்சவர் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். காட்டுமாரியம்மன் கோயில் வீதிகளில் தேர் பவனி வந்தது. அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, `ஓம் சக்தி, பராசக்தி’ என்ற கோஷத்துடன் பக்தி பரவசத்தோடு, தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். புதுக்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நகர் முழுவதும் ஆங்காங்கே அன்னதானம், நீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட எஸ்.பி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாசித் திருவிழாவின் தொடர்ச்சியாக, வரும் மார்ச் 21-ம் தேதி வரையிலும் தினமும் அபிஷேக, அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.