புதுச்சேரி: கால்நடைத்துறையில் ஆட்சியர் மணிகண்டன் ஆய்வுக்கு சென்றபோது சரியான நேரத்துக்கு பணிக்கு வராமல் இருந்த துணை இயக்குநர்கள் உட்பட 13 பேருக்கு விடுப்பு தந்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்ற புகார் பரவலாக இருந்து வந்தது. மேலும் சில சமூக ஆர்வலர்கள் காலையிலே அரசு அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள நிலைமைகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டும் நிலைமை சீராகவில்லை.
இதனை அடுத்து புதுச்சேரி தலைமை செயலர் ராஜீவ் வர்மா உத்தரவின் பேரில் உயர் அதிகாரிகள் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆட்சியாளர்களும் சில அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலுவலகத்தில் உள்ள குறைகள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடைத்துறை தலைமை அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 40 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரியும் இடத்தில் 2 துணை இயக்குநர்கள் உள்பட 13 பேர் பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்தது.
ஆட்சியர் ஆய்வுக்கு வந்த தகவலை அறிந்து பலரும் வரத்தொடங்கினர். தாமதமாக வந்த 13 பேருக்கும் விடுப்பு தரவும், பணிக்கு சரியான நேரத்துக்கு வராததற்கு அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.