வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ”கடந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி 31.33 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்தது,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது: கடந்த 2014ல் நாட்டில் 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்தது. இது, 2022 மார்ச் மாதத்தில் 31.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த 2016 நவம்பரில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. கறுப்புப் பணத்தை தடுக்கவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை தடுக்கவும், உயர் மதிப்புள்ள நோட்டு கள் பதுக்கப்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2017மார்ச் மாதத்தில், ரூபாய் நோட்டுகள் புழக்கம், 13.35 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. இதன்பின், ரூபாய் நோட்டுகள் புழக்கம் படிப்படியாக உயர்ந்துள்ளது. ரொக்கப் பரிவர்த்தனைக்கு பதிலாக, ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையை அதிகளவில் பயன்படுத்துவதையே அரசு ஊக்குவிக்கிறது. இதன் வாயிலாக, கறுப்புப் பணத்தை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது: டிஜிட்டல் அல்லது இ – ரூபாய் பயன்படுத்துவது, கடந்தாண்டு நவம்பரில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், ஒன்பது வங்கிகள் ஈடுபட்டுள்ளன. இதன்படி, டிஜிட்டல் முறையிலேயே பரிவர்த்தனை நடக்கும். இந்தாண்டு, பிப்., 28ம் தேதி நிலவரப்படி, 130 கோடி ரூபாய் மதிப்புள்ள பணப்புழக்கம் இந்த முறையில் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement