பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் நாசம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 100 ஏக்கர் வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயால் அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள வெள்ளகெவி வனப்பகுதியில், நேற்று மாலை சிறிய அளவில் காட்டு தீ பரவியது. அதன்பின்னர் காற்றின் வேகம் அதிகரித்ததால், காட்டுத் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. 100 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பரவி வருவதால் வனப்பகுதியில் இருந்த அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசமாகி வருகின்றன. இதனால், வனவிலங்குகளும் இருப்பிடத்தை விட்டு ஓடுகின்றன.

கோடை காலம் தொடங்கும் முன்பே பெரியகுளம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத் தீ பரவ தொடங்கியுள்ளது. இது குறித்து பெரியகுளம் வனச்சரக அதிகாரியிடம் கேட்டபோது, ‘காவலர்கள் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள் என 20 பேர் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரம் மற்றும் உயரமான மலைப்பாதை என்பதால், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.