பேத்தியின் குழந்தையை பார்க்க வந்த போது பரிதாபம் லாரி மோதி தொழிலாளி பலி

ஆரல்வாய்மொழி : திருநெல்வேலி மாவட்டம் கள்ளிகுளம் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை. ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள ஒரு ஆக்கர் கடையில் வேலை பார்த்து வந்தார். அவரது மகனின் மகளான பேத்திக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்க்க அய்யாத்துரை நேற்று காலை கள்ளிகுளத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஆசாரிப்பள்ளம் நோக்கி புறப்பட்டுள்ளார்.

அவர் வெள்ளமடம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வந்த போது சாலையில் பேரிகார்ட் வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து, வெள்ளமடம் நோக்கி ஒரு அரசு பேருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பஸ்சுக்கு வழிவிட அவர் பேரிகார்ட் முன்பு நின்றார். அப்போது தூத்துக்குடி வைகுண்டம் பகுதியை சேர்ந்த டிரைவர் ஆனந்த் (43) கண்டெய்னர் லாரியை  நாகர்கோவில் நோக்கி ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

வெள்ளமடம் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராதவிதமாக அய்யாத்துரை ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் லாரியின் முன்பகுதியில் சிக்கி இருசக்கர வாகனம் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. அப்போது கீழே விழுந்த அய்யாதுரை மீதுலாரியின் முன் டயர் ஏறியது. இதில் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி அய்யாதுரை பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் அறிந்ததும் பீமநேரி ஊராட்சி மன்ற தலைவர் சஜிதா சுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். விபத்து குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் சம்பவ இடம் வந்தனர். தொடர்ந்து விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை சரி செய்தனர். பின்னர் ஆரல்வாய்மொழி போலீசார் விபத்தில் சிக்கி பலியான அய்யாதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது பேத்தியின் பிரசவத்திற்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் விபத்தில் சிக்கி அய்யாதுரை பலியான சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லாரி டிரைவர் ஆனந்த் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

பேரிகார்டால் விபத்து?

காவல்கிணறு-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் உள்ள பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் ஆங்காங்கே பேரிக்கார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி வெள்ளமடம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே பேரிக்கார்ட் வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நாகர்கோவிலில் இருந்து வெள்ளமடம் நோக்கி அரசு பேருந்து வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அய்யாதுரை பேரிக்கார்டு வைக்கப்பட்டு இருந்ததால் அரசு பேருந்து செல்வதற்காக பேரிக்கார்டு முன்பு தனது வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

இந்தநிலையில் பின்னால் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் இதுபோன்று வளைவான பகுதியில் பேரி கார்டு வைத்துள்ளாதால் விபத்து ஏற்படுகின்ற சூழ்நிலை உள்ளது. ஆகவே அதனை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.