வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 1984ல் நடந்த விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதலாக, 7,844 கோடி ரூபாய் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 1984 டிச., 3-ம் தேதி இரவு, ‘யூனியன் கார்பைடு’ எனும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து திடீரென விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு போபால் நகரம் முழுதும் பரவியதில், 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 1.02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம் சார்பில், 1989ல் 715 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப் பட்டோருக்கு, கூடுதலாக 7,844 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில், 2010ல் சீராய்வு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எஸ்கே கவுல் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரணை நடத்தியது. இந்த அமர்வில் நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, அபய் ஒகா, விக்ரம் நாத், மகேஸ்வர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். வழக்கை தொடர்ந்து நடத்துவோம் என பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் இன்று, இந்த சீராய்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement