இலங்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகள் பலர் உள்ளனர். சர்வதேச நடைமுறைக்கு அமைவாக அவர்களுக்கும் குடிமக்களைப் போன்று அனைத்து உரிமைகளையும் வழங்கி பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.அதன் 04 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுளவாறு, மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வகையிலும் பாகுபாடு காட்டாமல் அவர்களின் அனைத்து மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாப்பதையும் ஊக்குவிப்பதையும் அனைத்து அரசும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், இது தொடர்பான அடிப்படை வரைவைத் தயாரிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
அதன்படி, 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தைத் திருத்தியமைத்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும், மேற்படி குழு முன்வைத்த சட்டமூலத்தின் அடிப்படையில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட வரைவுக்கு ஆலோசனை வழங்கவும். பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.