நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் நாளை முதல் புதிய கட்டிடத்தில் செயல்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர். நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.10.50 கோடியில், நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் அண்ணா ஸ்ேடடியம் அருகில் கலைவாணர் கலையரங்கம் செயல்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு கலைவாணர் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை, கடந்த 7ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். கீழ்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் மொத்தம் 56,809 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இதன் கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை இடம்பெற்றுள்ளது. முதல் தளத்தில் மேயர் அறை, துணை மேயர் அறை, நிர்வாக பிரிவு, தகவல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவு, தாய்மார்கள் பாலுட்டும் அறை, பார்வையாளர் அறை, உணவு அருந்தும் அறை, வரவேற்பறை, வரி வசூல் மையம் ஆகியவை உள்ளன. 2வது தளத்தில் ஆணையாளர் அறை, மாநகர பொறியாளர் அறை, பொறியியல் பிரிவு, விழா மண்டபம், கலந்தாய்வு அரங்கம், காணொளி காட்சி அறை ஆகியவையும், மூன்றாவது தளத்தில் மாமன்ற கூட்ட அரங்கம், நகர திட்டமிடுநர் அறை, மாநகர் நல அலுவலர் அறை, நகரமைப்புப் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு, நகர சார் அளவர் அறை ஆகியவையும், நான்காவது தளத்தில் பத்திரிக்கையாளர் அறை, வருவாய் பிரிவு, பதிவறை ஆகியவையும் அமைந்துள்ளது.
இவ்வலுவலகக் கட்டடத்தில், தீயணைப்பு வசதிகள், கண்காணிப்பு கேமரா வசதிகள், லிப்ட் வசதிகள், குளிர்சாதன வசதி மற்றும் உயர் கூரை அமைப்புடன் கூடிய மாமன்ற அரங்கம், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளும் உள்ளன. இந்த புதிய அலுவலகத்துக்கு மாநகராட்சி அலுவலகத்தை மாற்றும் பணிகள் நடந்து வந்தன. நேற்று மாநகராட்சி அலுவலக அறைகளில் இருந்து ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இன்றும் அலுவலகத்தை இடமாற்றும் பணிகள் நடந்து வந்தன. நாளை (புதன்) முதல் புதிய கட்டிடத்தில் மாநகராட்சி அலுவலகம் செயல்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.