முன்னாள் மாணவர்களை வர சொல்லுங்க.. தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்..!

அரசு பள்ளிகளின் மேம்பாடுகளுக்காக முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார். அதுகுறித்து அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது;

”தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சரின் வேண்டுகோள்

வணக்கம்!

தலைமையாசிரியராகிய உங்களாலும், பணிபுரியும் ஆசிரியர்களாலும்தான் உங்கள் பள்ளி இயங்குகிறது. நீங்களே உங்கள் பள்ளியின் தூணாக இருக்கிறீர்கள். உங்கள் பள்ளியில் நேற்றைய மாணவர்கள் இறுதியாண்டு முடித்துச் சென்றுவிட்டனர்.

இன்றிருக்கும் மாணவர்கள் நாளை சென்று விடுவர். ஆனால் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். எனவே பள்ளியின் தொடக்கம் முதல் அதன் வளர்ச்சி வரை பார்த்தவராக நீங்கள் இருக்கக் கூடும். மாணவர்களுக்கு பள்ளியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் பள்ளி மீது ஓர் இனம்புரியா பிணைப்பை ஒவ்வொரு மாணவரும் வைத்திருப்பதை அறிந்தவர் நீங்கள்.

ஒவ்வோர் ஆண்டும் பள்ளியிறுதி முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு இருக்கும் பள்ளி மீதான பிணைப்பு, பள்ளியிலும் வகுப்பிலும் உடன் படித்த நண்பர்கள் மீதான அன்பு, ஆசிரியர்கள் மீதான மரியாதை, பள்ளியின் வளர்ச்சியில் இருக்கக்கூடிய அக்கறை என ஒவ்வொன்றையும் அறிந்தவர் நீங்கள்தான். ஆகவே உங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைப்பது உங்களால் மட்டுமே சாத்தியம். சில மாணவர்கள் உள்ளூரில் இருக்கலாம்.

சிலர் பெருநகரங்களில் பணியாற்றலாம். வேறு சிலர் வெளிநாடுகளில் இருக்கலாம். எந்த மாணவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் அவர்களை ஒன்றிணைக்க முடியும்.

ஏற்கனவே முன்னாள் மாணவர்களை இணைத்துக் கொண்டு பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் நடந்திருக்கின்றனவா? இருக்கிறது எனில், உங்கள் அனுபவங்களை பள்ளிக் கல்வித் துறையோடு பகிர்ந்துகொள்ளுங்கள். முன்னாள் மாணவர்களைக் கொண்டு இதுவரை உங்கள் பள்ளிக்கு ஏதேனும் இது வரை செய்யவில்லை எனில், இனி அவர்களோடு இணைந்து பள்ளியின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க விருப்பத்தோடு இருக்கிறீர்களா?

இதுவரை முன்னாள் மாணவர்களோடு இணைந்து செயல்பட்டிருந்தாலும் இனி செயல்படவிருந்தாலும். கீழ்க்கண்ட சுட்டியை க்ளிக் செய்து அதில் உங்களைப் பற்றியும் பள்ளியைப் பற்றியுமான விவரங்களைத் தாருங்கள்” என்று அமைச்சர் அம்பில் மகேஷ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.