யார் கத்துக்குட்டி..? அதிமுகவை கவனமாக பார்த்துக்கோங்க – அதிமுக – பாஜக கருத்து மோதல்!

தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து பேசிய கடம்பூர் ராஜுவுக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி எதிர்வினையாற்றியுள்ளார். அவர் தனது ட்வீட்டில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில், அ.தி.மு.க.வின் கடம்பூர் ராஜு, பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியுள்ளதோடு மரியாதைக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலை டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பி விடுவார் என்றும் அவன், இவன் என்ற ஏக வசனத்தில் பேசியுள்ளதோடு, அரசியலில் கத்துக்குட்டி என்று விமர்சித்து பேசியிருப்பது அரசியல் அநாகரீகத்தின் வெளிப்பாடு.

டெபுடேஷனில் அரசியலில் இருப்பது அதிமுக தான் என்பதை கடம்பூர் ராஜு உணர வேண்டும். தமிழகத்தில் லஞ்ச, ஊழலை ஒழித்து கட்டி, நாகரீக அரசியலுக்கான மாற்றத்தை உருவாக்க தான் அண்ணாமலை அரசியல் பிரவேசம் என்று கடம்பூர் ராஜு போன்ற அரசியல் கத்துக்குட்டிகளுக்கு தெரியாதது வியப்பல்ல. மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தமிழகத்தில் தான் என்பதையும், நரேந்திர மோடி தலைமையில் உள்ள பாஜக அரசுக்கு மாற்றாக கண்ணுக்கெட்டிய காலம் வரையில் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை என்று தெரியாமல் பேசுகிறீர்கள் கடம்பூர் ராஜு அவர்களே!

அண்ணாமலை, ஜெயலலிதாவை பெருமைப்படுத்தியே பேசினார் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத, ஒரு சிறந்த தலைவரை போல், தான் இருப்பேன் என்று அண்ணாமலை பேசியதில் ஜெயலலிதா அவர்களின் உறுதியான தன்மையை உணர்த்தித்தான் என்பதையும் அறிந்து கொள்ள முடியாத ஒன்றும் தெரியாத கத்துக்குட்டி கடம்பூர் ராஜு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எது பெருமை, எது சிறுமை என்பது கூட புரிந்து கொள்ள முடியாதவர் செய்தி துறை அமைச்சராக எப்படி இருந்தார் என்பது வியப்பளிக்கிறது.

கட்சியை அண்ணாமலை காலி செய்து விடுவார் என்று சொல்லும் கடம்பூர் ராஜு, எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள். மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணாதீர்கள்.

நெருக்கடி நேரங்களில் கை கொடுத்து, தோளோடு தோள் நின்றவர்களை அவதூறு பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். நாவடக்கத்தோடு அரசியல் செய்ய முயற்சியுங்கள். இல்லையேல் காலம் பதில் சொல்லும்” என்று அதில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.