வனத்திற்குள் நிலவி வரும் வறட்சியால் காட்டு உயிர்களின் தாகம் தீர்க்க புதிய தண்ணீர் தொட்டிகளை வனத்துறை கட்டிவருகிறது. கட்டுமானம் நடைபெறும் வனப்பகுதியில் யானைகளின் தொடர் நடமாட்டத்தால் திட்டப்பணிகள் தாமதமாகிறதாக கூறுகின்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருது, மான் என ஏராளமான வன உயிரினங்கள் உள்ள போதிலும், இதில் யானைகளின் எண்ணிக்கை அதிகம். இவ்வனப்பகுதி முக்கிய வழித்தடப்பாதை என்பதால் வலசை செல்லும் யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவது வழக்கம். கடந்த பருவ மழைக்காலங்களில் போதிய அளவில் மழை பெய்யாத காரணத்தினாலும் கடந்த ஒன்றரை மாத காலமாக வெயிலின் தாக்கம் முன்கூட்டியே துவங்கியதாலும், பசுமையான இவ்வனப்பரப்பு தற்போது வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.
காட்டில் உள்ள உயிரினங்களின் தாகம் தீர்க்கும் இயற்கையான வனக்குட்டைகள், நீரோடைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் என அனைத்தும் வறண்டு வருவதால் யானைகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் தண்ணீர் தேடி வன எல்லையோரங்களில் வறட்சி காலத்தை சமாளிக்கும் வகையில் செயற்கையாய் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை தேடி வர துவங்கியுள்ளன. இதனால், ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பழைய தண்ணீர் தொட்டிகளை சீரமைக்கும் பணியிலும் புதிய தண்ணீர் தொட்டிகளை கட்டும் பணியிலும் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கு அருகே சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்து மோட்டார் இயங்கி நீர் நிரப்பும் தானியங்கி வகையிலான சோலார் பேனல் வசதியுடன் கூடிய புதிய தண்ணீர் தொட்டி தற்போது கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியில் பகல் நேரங்களிலேயே யானைகள் நடமாடுவதும் இரவு நேரங்களில் யானைகள் கான்கரீட் போட பயன்படுத்தும் பலகைகள் மற்றும் இதர கட்டுமான பொருட்களை சேதப்படுத்தி செல்வதும் பணியாளர்களை அச்சமடைய வைத்துள்ளது.
வனத்துறை ஊழியர்களின் கண்காணிப்போடு பகலில் சில மணி நேரங்கள் மட்டுமே இத்திட்டபணிகள் நடைபெறுவதால் புதிய நீர் தொட்டிகள் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கூடுதல் வனப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தண்ணீர் தொட்டி கட்டும் வேலை விரைவுப்படுத்தப்படும் என்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM