புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 11-ந்தேதியுடன் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது.
இதன்படி, இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இதில், உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.
எனினும், இரு அவைகளில் எதிர்க்கட்சிகளின் அமளியால், மதியம் 2 மணிவரை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் அவை கூடியதும், எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தது. இதனை தொடர்ந்து, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து 2-வது நாளாக நாடாளுமன்றம் இன்று கூடியதும், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் மற்றும் தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் குறும்படம் ஆகியவற்றுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது பற்றி உறுப்பினர்கள் பேசினர்.
இதன்பின்னர் ஒரு மணிநேரம் சென்றதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒருபுறம் கோஷம் எழுந்தது. மறுபுறம், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு கோரி எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின.
இதனால், 2-வது நாளாக மேலவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்படும் சூழல் எழுந்தது. எனினும், எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தி விவகாரம் பற்றி நாடாளுமன்றத்திற்கு வெளியே சசி தரூர் எம்.பி. அளித்த பேட்டியின்போது, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வகையில் எதுவும் கூறவில்லை.
ஜனநாயகத்தின் இன்றைய நிலைமையை பற்றி அவர் தனது வருத்தங்களை வெளிப்படுத்தி உள்ளார். ஆளுங்கட்சியால் ஜனநாயகம் மீது நடத்தப்படும் தாக்குதல் முறைகளை பற்றி தெரிவித்து உள்ளார்.
வெளிநாடுகளில் காங்கிரசை தாக்கி பிரதமர் மோடி பேசியவற்றை விட ராகுல் காந்தி குறைவாகவே பேசியுள்ளார்.
அவர் அரசு அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசினார். முந்தின அரசை தாக்கிப்பேசியும், போதிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் பிரதமர் மோடி குறைகூறி பேசினார்.
இதுபோன்று வெளிநாடுகளில் பேசும் வழக்கம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியால் அல்ல என்று சசி தரூர் எம்.பி. தனது பேட்டியில் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பல்வேறு இடங்களில் பேசினார். அவர், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார்.
இதன்பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என ராகுல் காந்தி பேசியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியர்களை ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார் என்றும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்தில் அவர் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயக ரீதியில் போட்டியிடும் இயல்பு முற்றிலும் மாறி விட்டது. அதற்கான காரணம் ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரேயொரு அமைப்புதான். அடிப்படைவாத, பாசிச கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத்து இந்திய அமைப்புகளையும் தனது பிடிக்குள் வைத்து உள்ளது என கூறினார்.
இந்தியாவில் பத்திரிகை துறை, நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு வழியிலோ அல்லது வேறு வகையிலோ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.
ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரிடமும் அரசு அமைப்புகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்று நீங்களே, கேட்டு பாருங்கள். என்னுடைய மொபைல் போனில் பெகாசஸ் (ஒட்டு கேட்கும் விவகாரம்) உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதெல்லாம் நடக்கவில்லை என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.